கெத்தே திரையரங்குகள் வழக்கம்போல தொடர்ந்து இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் முதலீட்டு நிறுவனமாக கிங்ஸ்மெட் சொத்து நிறுவனத்திடம் திரையரங்குகளை விற்க கெத்தே நிறுவனம் முதலில் திட்ட மிட்டிருந்தது. ஆனால் இருதரப்பினரிடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், திரையரங்குகளை விற்க திட்டம் இருக்கும்போதிலும் எப்போதும் போல உயர் ரக சேவையை கெத்தே திரையரங்குகள் வழங்கும் என்று கெத்தே நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் உறுதி அளித்தார்.
கெத்தே திரையரங்குகள் எம்எம்2 ஏஷியா நிறுவனத்துக்குச் சொந்தமானது, கெத்தே திரையரங்குகளை கிங்ஸ்மெட் நிறுவனத்திடம் $84.8 மில்லியனுக்கு விற்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக திரையரங்கு வர்த்தகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் திரையரங்குகளை விற்பதன் மூலம் குழுமத்தின் நிதிநிலையை மேம்படுத்த விரும்புவதாகவும் எம்எம்2 ஏஷியாவின் நிறுவனரும் நிர்வாகத் தலைவருமான மெல்வின் ஆங் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தெரிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஓமிக்ரான் கிருமிப் பரவல் காரணமாக நிலையற்றதன்மை நிலவுவதாகவும் அதனால் திரையரங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யும் ஆர்வத்தை இழந்துவிட்டதாகவும் கிங்ஸ்மெட் நிறுவனம் இம்மாதம் தெரிவித்தது.
கொவிட்-19 நெருக்கடிநிலை மேம்பட்டதும் கெத்தே திரையரங்குகளை வாங்குவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யப்படும் என்று கிங்ஸ்மெட் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

