2002 முதல் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்காக 130க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களை அதிகாரிகள் கையாண்டுள்ளனர். மேலும் இது சமூகப் பங்காளிகளுடன் நெருங்கிய ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், "பயங்கரவாத குழுக்கள் தொடர்ந்து தங்கள் திறன்களை வளர்த்து வருவதால், சமய மறுவாழ்வுக் குழு, பின்னலப் பராமரிப்பு தொடர்பான அமைப்புகளுக்கிடையிலான குழு போன்ற பங்காளிகளின் பங்கு முக்கியமானது," என்று கூறினார்.
கேலாங்கில் உள்ள கத்திஜா பள்ளிவாசலில் நேற்று நடந்த கருத்தரங்கில் பேசிய திரு சண்முகம், "15 பேர் மட்டுமே பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளவர்கள், கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள 26 பேர் சமூகத்துடன் சேர்ந்திருக்க விடுவிக்கப்பட்டுள்ளனர்," என்று தெரிவித்தார்.
"இது அரசாங்கத்தால் மட்டும் செய்யக்கூடியது அல்ல. பல்வேறு அமைப்புகள் தங்கள் நேரத்தையும் வளங்களையும் ஒன்று திரட்டி, தடுத்து வைக்கப்பட்டோர், அவர்களின் கண்காணிப்பாளர்கள், அவர்களின் குடும்பங்கள் தகுந்த ஆலோசனை வழங்கியுள்ளன," என்று அமைச்சர் விவரித்தார்.
"அரசாங்கத்துக்கும் சமூக பங்காளிகளுக்கும் இடையே உள்ள உன்னதமான ஒருங்கிணைந்த முயற்சியே சிங்கப்பூரின் இந்த வெற்றிக்குக் காரணம். இந்தப் பங்காளித்துவத்தின் விளைவாகத்தான் சமய மறுவாழ்வுக் குழுவும் பின்னலப் பராமரிப்பு தொடர்பான அமைப்புகளுக்கிடையிலான குழுவும் தோன்றின," என்றார் சமய மறுவாழ்வுக் குழுவின் துழைத் தலைவர் திரு முகம்மது அலி.
சமய மறுவாழ்வுக் குழுவும் பின்னலப் பராமரிப்பு தொடர்பான அமைப்புகளுக்கிடையிலான குழுவும் இணைந்து ஏற்பாடு செய்த நேற்றைய கருத்தரங்கு, ஜமா இஸ்லாமியா பயங்கரவாத அமைப்புக்கு (ஜேஐ) எதிராக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் 20ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
சிங்கப்பூரில் பல இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்த ஜமா இஸ்லாமியா அமைப்பு 2001ல் திட்டம் தீட்டியது.
அன்று முதல் 56 ஜமா இஸ்லாமியா உறுப்பினர்களுக்குத் தடுப்புக் காவல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. அவர்களில் நால்வர் இன்னும் தடுப்புக் காவலில் உள்ளனர். விடுவிக்கப்பட்ட எந்தவொரு ஜேஐ உறுப்பினரும் மீண்டும் குற்றம் புரியவில்லை.
"ஆனால் அந்த பயங்கரவாத அமைப்பால் மிரட்டல்கள் வரும் என்று விழிப்பாக உள்ளோம். இந்தோனீசியாவில் நிதி திரட்டி தனது நடவடிக்கைகளுக்குப் புத்துயிர் அளிக்க அந்த அமைப்பு முயன்று வருகிறது," என்று அமைச்சர் சண்முகம் சுட்டினார்.

