2015ல் தொழிலியல் எரிவாயு நிறுவன வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர் குற்றச்சாட்டை எதிர்த்து வாதிடுகிறார்

2015ல் தொழிலியல் எரிவாயு நிறுவன வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர் குற்றச்சாட்டை எதிர்த்து வாதிடுகிறார்

2 mins read
7e0ac1fb-3fbe-4b6d-84cd-88f462454033
-

2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்புடன் தொடர்புடைய ஆய்வகத்தின் செயல்பாடுகள், "செயல்படாதது, எளிமையானது, போதுமானதாக இல்லை" என்று 2011ஆம் ஆண்டின் அபாய மதிப்பீட்டு அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதியன்று ஜூரோங்கில் உள்ள தஞ்சோங் கிளிங் சாலையில் உள்ள லீடன் நேஷனல் ஆக்சிஜன் ஆய்வகத்தில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தில் வேதியியலாளர் லிம் சியாவ் சியான் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அந்தநிறுவனத்தின் முன்னாள் தலைமை இயக்குநரான 64 வயது கேரி சூ பு சாங் முன்பு வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின் கீழ் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை எதிர்த்து வழக்குக் கோரியுள்ளார்.

அந்த நிபுணத்துவ எரிவாயு நிலையத்தின் ஆய்வகத்தில் மற்ற வரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் கேரி கவனக்குறைவாக இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

நேற்று நடைபெற்ற முதல் நாள் நீதிமன்ற விசாரணையில், ஆய்வகத்தின் செயல்பாடுகள் குறித்து போதுமான அபாய மதிப்பீடு செய்யவில்லை என்று அந்த சிங்கப்பூரர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

அங்கு பயன்படுத்தப்படும் எரிவாயு அடைப்புக் கருவிகளை கண்காணிப்பதற்கும் பராமரிப்பதற்கும் ஒரு செயல்முறை இருப்பதை உறுதி செய்வதிலும் அவர் தவறிவிட்டதாக கூறப்பட்டது.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் ஏற்பட்ட வேலையிடப் பாதுகாப்புக் கவனக்குறைவு தொடர்பில் கடந்த ஆண்டு ஜனவரியில் லீடன் நேஷனல் ஆக்சிஜன் நிறுவனத்துக்கு $340,000 அபராதமும் அதன் நிர்வாக இயக்குநரான திரு ஸ்டீவன் தாம் வெங் சியோங்குக்கு $45,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

மனிதவள அமைச்சின் வழக்கறிஞர் சேமுவல் சுவா நேற்று நீதிமன்றத்தில் பேசியபோது, 2011ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று, ஆய்வகத்தில் எரியக்கூடிய வாயுக்களின் பகுப்பாய்விற்காக அபாய மதிப்பீடு நடத்தப்பட்டது என்று கூறினார். அதை யார் நடத்தினார்கள் என்பது குறிப்பிடப்படவில்லை என்றார்.

அந்த மதிப்பீட்டை 2014ஆம் ஆண்டு, மார்ச் 7ஆம் தேதி பார்த்த ஆய்வகத்தின் நிர்வாகி அதற்கு ஒப்புதல் அளித்தார். ஆனால், அதற்கு முன்பு அந்த மதிப்பீட்டு அறிக்கையை யார் மதிப்பீடு செய்து ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடவில்லை.

பணி நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் அபாயங்களைத் தவிர்ப்பதற்கான இடர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், எரிவாயு அடைப்புக் கருவிகளின் சரியான கண்காணிப்பு, அவற்றின் சரியான அடையாளம் போன்றவற்றை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்றும் திரு சுவா கூறினார்.

"அபாயங்களை மதிப்பீடு செய்வதற்கு தகுந்த நிபுணர்கள் இல்லாத பட்சத்தில் லீடன் நிறுவனம் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார அதிகாரி அல்லது வேலையிடப் பாதுகாப்பு தணிக்கையாளர் அல்லது அங்கீகாரம் பெற்ற மூன்றாம் தரப்பு ஆலோசகர் ஒருவரை அமர்த்தி தனது குழுவுக்கு உதவ ஏற்பாடு செய்திருக்க வேண்டும்," என்றும் திரு சுவா, மாவட்ட நீதிபதி கமலா பொன்னம்பலத்திடம் தெரிவித்தார்.

திரு கேரியின் சார்பில் வழக்கறிஞர் கிரேகரி ஓங் வாதாடுகிறார். விசாரணை இன்று தொடர்கிறது.