சிங்கப்பூரின் சீன-மலாய்-இந்திய-மற்றவர்கள் (CMIO) இன வகைப்பாட்டு முறையானது, அடிப்படையில் இனம் தொடர்பான கொள்கைகளை நிர்வகிக்க அரசாங்கத்திற்கான ஒரு நிர்வாகக் கருவி என்றும் இது மக்களின் அடையாளத்தின் முக்கிய அங்கமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்கை ஆய்வுக் கழகம் நேற்று ஏற்பாடு செய்த வருடாந்திர சிங்கப்பூர் கண்ணோட்டம் மாநாட்டில் இந்தக் கருத்து வெளியிடப்பட்டது.
மேடையில் இருந்த பேச்சாளர் குழுவை நோக்கி, கொள்கை ஆய் வுக் கழகத்தின் ஆய்வாளரான டாக்டர் கல்பனா விக்னேசா, "சிங்கப்பூரின் சீன-மலாய்-இந்திய-மற்றவர்கள் இன வகைப்பாட்டு முறையைக் கடந்து, உண்மை வாழ்க்கையில் அடையாளங்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறதா," என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த பிரதமர் அலுவகத்தின் உத்திபூர்வக் குழுவின் துணைச் செயலாளரான திருவாட்டி சிண்டி கூ, "மக்களை இன அடிப்படையில் வகைப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்துக்கு அறவே இல்லை," என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, "இன ஒருங்கிணைப்புக் கொள்கையிலும் சில கரடுமுரடான அம் சங்கள் இருக்கின்றன. ஆனால் அவை சிறப்பாகக் கையாளப்பட்டு வருகின்றன," என்றார்.

