புதிய, இளம் ஊழியர்களையும் கண்காணித்துக்கொண்டு தங்களின் மேலதிகாரிகளுக்கும் இணங்கி செயல்படும் நிலையிலுள்ள நடுநிலை நிர்வாகிகளுக்குத்தான் அதிக வேலைச் சுமை இருப்பது தெரியவந்துள்ளது.
ஸ்ட்ரெய்டஸ் டைம்ஸ் நடத்திய கருத்தாய்வில் பங்கேற்ற நடுநிலை நிர்வாகிகளில் 61% தினந்தோறும் கூடுதல் நேரம் வேலை செய்வதாகத் தெரிவித்தனர்.
அவர்களுக்கு மேல் இருக்கும் நிறுவன இயக்குநர்கள் போன்றோரில் 49% மட்டுமே கூடுதல் நேரம் வேலை செய்கின்றனர். புதிய, இளம் ஊழியர்களில் 54% கூடுதல் நேரம் பணியில் ஈடுபடுகின்றனர்.
இதர ஊழியர்களைச் சமாளிப்பது, வர்த்தகச் செயல்பாடுகளைக் கவனிப்பது ஆகிய இரண்டு பணிகளிலும் ஈடுபடும் நடுநிலை நிர்வாகிகள்தான் அதிக வேலைச் சுமையை எதிர்நோக்குகின்றனர் என்று சிங்கப்பூர் மனிதவளக் கழகத்தின் தலைவர் லோ பெக் கெம் கூறினார்.
கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் ஊழியர்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் நலனைக் கவனித்துக்கொள்வதில் நடுநிலை நிர்வாகிகள் கூடுதல் நேரம் செலவிடுவதாக 'மேன்பவர்குரூப் சிங்கப்பூர்' நிறுவனத்தின் சிங்கப்பூருக்கான நிர்வாகி லிண்டா டியோ சொன்னார்.
திறனாளர்களை வேலையில் அமர்த்த நிறுவனங்களுக்கிடைேய கடும் போட்டி இருப்பதால் ஊழியர்களை நியமிப்பதற்கான செலவு அதிகரித்துள்ளது. அதனால் புதிய ஊழியர்களை நியமிக்கும் எண்ணம் கொண்டுள்ள நிறுவனங்களும் அதிகம் செலவு செய்ய நேரிடுகிறது.
ஆய்வு நிறுவனமான மிலியூ கழகம் இம்மாதம் 1,076 ஊழியர்களைக் கொண்டு கருத்தாய்வு ஒன்றை நடத்தியது. நிறுவனங்களின் விளம்பர, பாதுகாப்பு, மனிதவள, வர்த்தக மேம்பாட்டுப் பிரிவுகளில்தான் ஊழியர்கள் கூடுதல் நேரம் வேலை பார்க்க நேரிடுவதாக தெரியவந்தது.
நிறுவனங்கள் தொடர்ந்து சீராகச் செயல்படுவதன் தொடர்பிலான விவகாரங்கள், ஊழியரணி மாற்றங்கள் ஆகியவற்றைச் சமாளிக்கும் பொறுப்பு இந்தப் பிரிவுகளுக்கு இருப்பதாக 'பீப்பல் வோர்ல்டுவைட் கன்சல்டிங்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டேவிட் லியோங் குறிப்பிட்டார்.
கருத்தாய்வு முடிவுகளின்படி, அரசாங்க அமைப்புகள், பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் ஊழியர்களில் பாதிக்கும் மேலானோர் தினந்தோறும் கூடுதல் நேரம் வேலை செய்கின்றனர். சிறிய கோளாறுகளைச் சரிசெய்யும் பணியாளர்கள், மனிதவளம், விளம்பரம் உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரும் கூடுதல் நேரம் வேலை செய்கின்றனர்.
வேலை செய்வதற்கு அதிகபட்ச நேரத்தை வரையறுக்குமாறு கவனிப்பாளர்கள் நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஓய்வு நேரங்களில் சந்திப்புகளை நடத்தாமல் இருப்பது போன்றவற்றைப் பின்பற்று மாறும் நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

