ஓய்வுத்தளச் சந்திப்பில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் பங்கேற்க மாட்டார்

ஓய்வுத்தளச் சந்திப்பில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் பங்கேற்க மாட்டார்

1 mins read
4016282e-dd0c-498f-a5e8-ffe8f2b61387
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர்-இந்தோனீசியத் தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பில் பங்கெடுப்பதற்காக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இந்தோனீசியாவின் பிந்தான் தீவுக்குச் செல்ல மாட்டார்.

நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருவருக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து டாக்டர் பாலகிருஷ்ணனுக்கு சுகாதார அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தம்முடைய சார்பில் வெளியுறவு மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் ஓய்வுத்தளச் சந்திப்பில் பங்கெடுப்பார் என்று இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 25) தமது ஃபேஸ்புக் பக்கத்தில் டாக்டர் பாலகிருஷ்ணன் பதிவிட்டார்.

தமது ஆன்டிஜன் விரைவு பரிசோதனை (ஏஆர்டி) முடிவைப் பதிவேற்றம் செய்தார் அவர். அதில், 'தொற்று இல்லை' என உறுதி செய்யப்பட்டது. டாக்டர் பாலகிருஷ்ணன், ஏழு நாள் கண்காணிப்பில் இருப்பார்.

"அடுத்த ஏழு நாள்களுக்கு நான் ஏஆர்டி பரிசோதனைகளை வழக்கமாக செய்துகொள்வேன். சொல்லப்போனால், பல மாதங்களாக சந்திப்புகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் முன்பு வழக்கமான ஏஆர்டி பரிசோதனைகளை நான் செய்து வந்துள்ளேன். எனவே, அடிக்கடி பரிசோதனை செய்துகொள்வது எனது அன்றாட பணியில் ஓர் அங்கமாகிவிட்டது," என்றார் அவர்.

இந்நிலையில், தங்களுடைய பயணம் பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் அமைய பிரதமர் லீ சியன் லூங்கிற்கும் தம்முடைய சகாக்களுக்கும் டாக்டர் பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துக்கொண்டார்.