கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூர் பயணிகள் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையின்றி பாத்தாமுக்கும் பிந்தானுக்கும் வரலாம் என்ற இந்தோனீசியா அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவ்விரு தீவுகளுக்கும் படகு சேவை வழங்குவோரை அதிகமானோர் தொடர்புகொண்டு, விவரம் கேட்டு வருகின்றனர்.
அத்தீவுகளுக்குச் சென்றுவிட்டு சிங்கப்பூர் திரும்பும் பயணிகள் இல்லத் தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்ற சூழலிலும் அங்கு செல்ல பலர் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
பயணப் பாதை ஏற்பாட்டின்கீழ், சிங்கப்பூர் பயணிகள் பாத்தாமில் உள்ள நொங்சாபுரா படகு முனையம் வழியாகவும் பிந்தானில் உள்ள பண்டார் பெந்தான் தெலானி படகு முனையம் வழியாகவும் இந்தோனீசியாவினுள் நுழைய அனுமதிக்கப்படுவர். அவர்கள் முழுமையாக கொவிட் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், அத்துடன், இந்தோனீசியா சென்றடையுமுன் குறைந்தது கடைசி 14 நாள்கள் சிங்கப்பூரில் இருந்திருக்க வேண்டும்.
மேலும், சிங்கப்பூரில் இருந்து புறப்படுவதற்கு மூன்று நாள்களுக்குள் 'பிசிஆர்' பரிசோதனையில் 'தொற்று இல்லை' எனச் சான்று பெற்றிருக்க வேண்டும். அவர்கள் இந்தோனீசியா சென்றதும் அங்கும் ஒருமுறை 'பிசிஆர்' பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
அங்கு சென்றுவிட்டு சிங்கப்பூர் திரும்புவோர் இங்கு ஏழு நாள்களுக்கு இல்லத் தனிமை உத்தரவின்கீழ் இருக்க வேண்டும்.