ஊழல் குறைவான நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஊழலுக்கு எதிரான டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு, 180 நாடுகளையும் வட்டாரங்களையும் ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில் அது தெரிவிக்கப்பட்டது.
சுவீடனுடன் சேர்ந்து நான்காவது இடத்தில் வந்த சிங்கப்பூர், 2021 ஊழல் கருத்துணர்வுக் குறியீட்டில் 85 புள்ளிகள் பெற்றது.
சிங்கப்பூர் 2020ஆம் ஆண்டிலும் இதே புள்ளிகளைப் பெற்றிருந்தது. ஆசியாவைப் பொறுத்தவரை அதிகப் புள்ளிகளைப் பெற்ற நாடும் சிங்கப்பூர்தான்.
பட்டியலில் முதல் இடத்தை டென்மார்க், ஃபின்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகள் கூட்டாகப் பெற்றன. அவை மூன்றும் தலா 88 புள்ளிகள் பெற்றிருந்தன.
முதன்முறையாக, தனது ஊழல் கருத்துணர்வுக் குறியீடு கடந்த 10 ஆண்டுகளில் ஊழலின் நிலை குறித்து முழுமையாக பார்வையிட்டதாக டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் கூறியது.
'எந்தெந்த நாடுகள் கடந்த பத்து ஆண்டுகளில் மேம்பட்டன, எவை மோசமாகின, எந்த நாடுகள் தேக்கம் அடைந்தன' என்பதை ஆராய்ந்ததாக அமைப்பு கூறியது.
கடந்த பத்து ஆண்டுகளில் உலக நாடுகளில் 86 விழுக்காடு, பெரிய முன்னேற்றம் அடைய வில்லை என்று அமைப்பு குறிப்பிட்டது.
நாட்டு மக்களின் சுதந்திரத்தை அத்துமீறி அடக்கிய நாடுகள் தொடர்ந்து ஊழல் கருத்துணர்வுக் குறியீட்டில் மோசமான இடத்தைப் பெறுவதாக அமைப்பு சொன்னது.
180 நாடுகளில் பொதுத் துறை ஊழல் எப்படி உள்ளது என்ற பரவலான கருத்தின் அடிப்படையில் அமைப்பு தர வரிசைப்படுத்துகிறது.
கடந்த 2012லிருந்து, குறியீட்டில் 23 நாடுகள் மிகவும் மோசமடைந்துள்ளன.
குறிப்பாக ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் லஞ்ச ஊழல் குறைவான தலைசிறந்த 25 நாடுகளில் இடம்பெறவில்லை என்று அமைப்பு கூறியது.
2021 குறியீட்டில் 40 புள்ளிகள் பெற்ற இந்தியா, பட்டியலில் 85வது இடத்தில் உள்ளது.
இந்தியா கண்காணிக்கப்பட வேண்டிய நாடு என்று டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் வகைப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் சுதந்திர நிலை பற்றி கவலை எழுந்துள்ள அதேவேளையில், அங்கு ஊழலைக் கட்டுக்குள் வைத்திருக்கும் முக்கிய நடைமுறைகள் வலுவிழந்து வருவதாக அமைப்பு குறிப்பிட்டது.
மனித உரிமை மீறல் அதிகரிக்கும்போது ஊழலும் அதிகரிக்கிறது என்று அது தெரிவித்தது.
33 புள்ளிகளுக்கு இறங்கியுள்ள பிலிப்பீன்சில் கருத்துச் சுதந்திரம் வெகுவாகக் குறைந்துள்ளதையும் அங்கு ஊழல் அதிகரித்துள்ளதையும் அமைப்பு சுட்டியது.
2016 தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து, அதிபர் ரோட்ரிகோ டுடர்ட்டே, கருத்துச் சுதந்திரத்தை அடக்கி வருவதைச் சுட்டிய அமைப்பு, அங்கு 2020ல் கருத்துச் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்த 20 பேர் கொல்லப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டது.
மேலும், கொவிட்-19 கொள்ளை நோய் பரவலுக்கும் ஊழலுக்கும் இடையே தொடர்பு உள்ளதாகவும் அமைப்பு கூறியது. ஆசிய அரசுகள் உலகின் ஆகப்பெரிய பொருளாதார மீட்புத் திட்டங்களை அறிவித்ததன் மூலம் கொள்ளை நோய் சவாலை எதிர்கொண்டதை அது குறிப்பிட்டது.

