சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப் பொருள் கடத்தல்காரர் நாகேந்திரன் தர்மலிங்கத்தின் மேல்முறையீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவருடைய புதிய வழக்கறிஞர், வைலட் நேட்டோவின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் மேல்முறையீட்டு விசாரணையை ஒத்திவைப்பதாகத் தெரிவித்தது.. முன்னதாக நாகேந்திரன் சார்பில் வழக்கறிஞர் எம். ரவி வாதாடி வந்தார். நாகேந்திரனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிர்த்து நாகேந்திரன் மேல்முறையீடு செய்துள்ளார். 2011ல் உயர் நீதிமன்றத்திலும், 2019ல் உச்ச நீதிமன்றத்திலும் தனது மேல்முறையீடுகளில் அவர் தோல்வியடைந்தார். இதனையடுத்து, நாகேந்திரனின் மரண தண்டனை சென்றாண்டு நவம்பர் 10ஆம் தேதி நிறைவேற்றப்பட வேண்டியிருந்தது.
ஆனால் அதற்கு ஒரு நாள் முன்பு, அவருக்குக் கிருமித்தொற்று உறுதியானதால் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டில் 42.72 கிராம் கலப்படமற்ற ஹெராயின் போதைப் பொருளைத் சிங்கப்பூருக்குக் கடத்தியதன் தொடர்பில் நாகேந்திரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.


