சில மீன்களின் விலை அதிகரிப்பு
சீனப் புத்தாண்டை முன்னிட்டு பிரபல மீன் வகைகள் சிலவற்றின் விலை அதிகரித்துள்ளது. சீன பாம்ஃபிரட், ரெட் குரூப்பர் ஆகிய மீன் வகைகள் இவற்றில் அடங்கும்.
பல ஈரச் சந்தைகளில் ஒரு கிலோகிராம் பாம்ஃபிரட்டின் விலை 90லிருந்து 100 வெள்ளி வரை விற்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் இதன் விலை 40லிருந்து 50 வெள்ளியாக இருந்தது. ஒரு கிலோகிராம் ரெட் குரூப்பரின் விலை 75 வெள்ளி. கடந்த நவம்பர் மாதம் இருந்ததைவிட தற்போது இதன் விலை கிட்டத்தட்ட இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது.
பொதுவாகச் சீனப் புத்தாண்டுக் காலத்தில் மீன்களின் விலை கூடுவது வழக்கம். இருந்தாலும், சென்ற மாதம் மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் விலையை மேலும் பாதித்துள்ளதாகக் கடைக்காரர்கள் கூறினர்.
சிங்க நடனத்திற்குக் கட்டுப்பாடு
சீனப் புத்தாண்டு காலத்தில் தனியார் கூட்டுரிமை வீடுகளில் 'கை சிங்' சடங்கைக் கொண்ட சிங்க நடனத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கட்டட, கட்டுமான ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விதிமுறை, வீடுகளுக்குள்ளேயும் பொருந்தும்.
'கை சிங்' என்பது இலைகளைப் பறிக்கும் சடங்கு. அதிர்ஷடம் தரும் என்று நம்பப்படும் இந்தச் சடங்கை மேற்கொள்ளுமாறு பொதுவாக சீனப் புத்தாண்டு காலத்தில் வர்த்தகர்களும் வீட்டு உரிமையாளர்களும் சிங்க நடனக் குழுக்களுக்கு அழைப்பு விடுப்பர்.
$2.6 மில்லியன் நன்கொடை
பொங்கோலில் திறக்கப்படவுள்ள சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகத்தில் மாணவர் நிலையங்களில் ஒன்று சொத்துச் சந்தை தொழிலதிபர் 'சுவா தியென் போவின் பெயரைக் கொண்டிருக்கும். ஹோ பீ டேண்டின் நிறுவனரான திரு சுவா, தொழில்நுட்பக் கழகத்திற்கு 2.6 மில்லியன் வெள்ளியை நன்கொடையாக வழங்கியுள்ளார். புதிய வளாகத்தைக் கட்டவும் கல்வி நிதியுதவித் திட்டம் ஒன்றைத் தொடங்கவும் அவர் இந்தத் தொகையை நன்கொடையாக வழங்கினார்.
இந்த மாணவர் நிலையம் சுவா தியென் போ டிஸ்கவரி ஹப்' என்றழைக்கப்படும். புதிய தொழில்நுட்பக் கழக வளாகத்தின் கிழக்குப் பகுதியில் இந்த நிலையம் இரண்டு மாடிகளில் அமைந்திருக்கும். சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகம் 2024ஆம் ஆண்டு திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சு எச்சரிக்கை
உக்ரேனுக்குப் பயணம் மேற்கொள்வதை ஒத்திவைக்குமாறு வெளியுறவு அமைச்சு சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. ஏற்கெனவே அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டவர்களைத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சு கேட்டுக்கொண்டது. தற்போது உக்ரேனில் இருப்போர் விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும் உள்ளூர் செய்தியை உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
உக்ரேனில் தற்போது மோசமடைந்துவரும் பதற்றநிலையையொட்டி சிங்கப்பூரர்கள் எச்சரிக்கப்படுகின்றனர். ரஷ்யா உக்ரேனுக்குப் படையெடுக்கும் சாத்தியம் நிலவியுள்ளது. உக்ரேனுக்கு அருகே ரஷ்யா 100,000 துருப்புகளை நிறுத்தியுள்ளது. ஆனால் உக்ரேனைத் தாக்கத் தான் திட்டமிடவில்லை என்றும் ரஷ்யா கூறி வருகிறது.

