கொவிட்-19 பரவல் காலகட்டத்தில் வேலை மோசடிகள் மிகவும் அதிகரித்துவிட்டதாகக் காவல்துறை எச்சரித்துள்ளது.
எளிதான வேலைகள், அதிகமான தரகுப்பணம் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி, ஏமாந்துபோவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
அண்மையில் கிட்டத்தட்ட 470 ஓசிபிசி வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து குறைந்தது $8.5 மில்லியன் சுருட்டப்பட்டதாகத் தகவல் வெளியானது. சிலர் தங்களது ஆறு இலக்கச் சேமிப்பை மோசடிப் பேர்வழிகளிடம் பறிகொடுத்தனர்.
இந்நிலையில், வேலை மோசடிகளில் சிக்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காண்கிறோம் என்று மோசடித் தடுப்பு மைய இயக்குநரும் காவல்துறைக் கண்காணிப்பாளருமான மிஷெல் டே, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த சிறப்பு நேர்காணலின்போது கூறினார்.
கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 658 வேலை மோசடிச் சம்பவங்கள் இடம்பெற்றன. இது, 2020ஆம் ஆண்டின் முற்பாதியைவிட 16 மடங்கு அதிகம். 2020 ஜனவரி-ஜூன் மாதங்களில் 40 வேலை மோசடிச் சம்பவங்கள் இடம்பெற்றன.
2021 முற்பாதியில் வேலை மோசடிகளில் பாதிக்கப்பட்டோர் $6.5 மில்லியனை இழந்தனர். முந்திய ஆண்டின் இதே காலகட்டத்தில் வேலை மோசடிகளால் $60,000 பறிபோனது.
கொவிட்-19 பெருந்தொற்றானது வேலை மோசடிப் பிரச்சினையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது என்றார் திருவாட்டி டே.
மின்னிலக்க முறையில் பணம் செலுத்துவது என்பது இருபக்கமும் கூராக இருக்கும் வாளைப் போன்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
"கிருமிப் பரவல் காலகட்டத்தில், மின்னிலக்க முறையில் பணம் செலுத்துவது கூடிவிட்டது. இது நமக்கு வசதியாக இருந்தாலும், மோசடிப் பேர்வழிகளுக்கும் வசதியாகப் போய்விட்டது. அவர்கள் எளிதாகப் போலிக் கணக்குகளை உருவாக்கி, பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுகின்றனர்," என்று திருவாட்டி டே விளக்கினார்.
அண்மைய மாதங்களில் தமது மையம் எதிர்கொண்ட ஐந்துவித வேலை மோசடிகள் குறித்தும் அவர் விவரித்தார். அவையாவன:
1. போலிக் கைப்பேசிச் செயலி
சரிபார்க்கப்படாத இணையத்தளங்களில் இருந்து கைப்பேசிச் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படலாம். அச்செயலிகள் வாயிலாக மிகுந்த வருமானம் ஈட்டும் வேலைகளை அவர்கள் பெற முடியும் என மோசடிப் பேர்வழிகள் ஆசை காட்டுவர். தாங்கள் குறிப்பிடும் வங்கிக் கணக்குகளுக்கு அல்லது மின்னிலக்க நாணயக் கணக்குகளுக்குப் பணப் பரிவர்த்தனை செய்யும்படி அவர்கள் கூறுவர்.
2. எச்சரிக்கைக் கடிதம்
இவ்வகை மோசடி, முதல்வகை மோசடியின் தொடர்ச்சி. முதல்வகை மோசடியில் ஏமாந்து, அதிலிருந்து வெளியேற முயல்வோருக்கு உள்ளூர் அதிகாரிகளிடம் இருந்து வருவதுபோன்ற எச்சரிக்கைக் கடிதங்கள் அனுப்பப்படும். மேலும் பணத்தை மாற்றிவிடும்படி அவர்களுக்கு நெருக்குதல் தரப்படும். இல்லாவிடில், அவர்கள்மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுவர்.
3. எளிதான பகுதிநேர வேலை
சமூக ஊடகப் பதிவுகளுக்கு விருப்பக்குறி (like) இடுவது போன்ற எளிதான வேலைகளைச் செய்வதன்மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தைகள்மூலம் மோசடி வலை விரிக்கப்படும்.
4. திரைப்பட நுழைவுச்சீட்டு
மோசடிக்காரர்கள் தாங்கள் குறிப்பிடும் கைப்பேசிச் செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதன் மூலமாகத் திரைப்பட நுழைவுச்சீட்டுகளை வாங்கி, விற்பதன் மூலமாகப் பணம் ஈட்டலாம் என வலைவிரிப்பர்.
5. 'ஷாப்பி பே'
'ஷாப்பி' மின்வணிகத்தளம் போன்றே காட்சியளிக்கும் 'ஷாப்பி பே' செயலியைத் தரவிறக்கம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படலாம். அதன் வழியாகப் பொருள்களை வாங்க பணிப்பு (order) செய்து, தரகுத்தொகை பெறலாம் என ஆசை காட்டலாம். அதற்கு, முன்கூட்டியே வைப்புத்தொகை செலுத்தும்படி மோசடிப் பேர்வழிகள் கூறுவர். ஆனால், அதன்பின்னர் பாதிக்கப்பட்டவர்களால் தங்களது கணக்குகளில் இருந்து பொருள் பணிப்பு செய்ய முடியாது அல்லது அவர்களின் கணக்குகள் முடக்கப்படலாம்.

