தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் படித்தபோது, முறைத்துப் பார்த்த சம்பவம் தொடர்பில் இன்னொரு மாணவரைக் கத்தியால் தாக்கிய இளையர் குறைந்தது ஓராண்டு காலத்திற்குச் சீர்திருத்தப் பயிற்சிபெற வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இப்போது 19 வயதாகும் பழனிதாஸ் ராமதாஸ் எனும் அந்த இளையர், தாக்குதலில் ஈடுபட்ட சமயத்தில் ஏமாற்று, உரிமமின்றி வாகனம் ஓட்டியது உள்ளிட்ட குற்றங்களுக்காகப் பிணைபெற்று வெளியில் இருந்தார்.
சக மாணவரைப் பயங்கரமான முறையில் பழனிதாஸ் தாக்கியதாகவும் அவர் தப்பிக்க முயன்றபோது விரட்டியதாகவும் துணை அரசாங்க வழக்கறிஞர் சியா ஈ வெய் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தாக்குதலுக்குண்டான மாணவருக்கு அப்போது வயது 19. அவருக்கு இடது தோளிலும் காதிலும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.
தீர்ப்பையடுத்து, பழனிதாஸ் சீர்திருத்தப் பயிற்சி நிலையத்தில் அடைக்கப்படுவார். அங்கு அவர் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். அங்கு அவருக்கு ஆலோசனையும் வழங்கப்படும்.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவருக்கு $135.66 இழப்பீடு வழங்குமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டது.
ஆயுதத்தால் காயப்படுத்தியது, ஏமாற்று உட்பட தன்மீது சுமத்தப்பட்ட எட்டுக் குற்றச்சாட்டுகளைக் கடந்த மாதம் பழனிதாஸ் ஒப்புக்கொண்டார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி, தம் நண்பர்களில் ஒருவருக்குப் பிரச்சினை இருப்பதால் கல்விக் கழகத்திற்கு வரும்போது ரொட்டி வெட்டும் கத்தியை எடுத்து வரும்படி தம் கூட்டாளி ஒருவரை பழனிதாஸ் கேட்டுக்கொண்டார்.
அவர் சொன்னபடி அந்த இளையரும் மறுநாள் ஐடிஇக்கு வந்தபோது கத்தி எடுத்து வந்தார்.
கல்விக் கழக வளாக உணவகத்தில் இருந்தபோது, முறைத்துப் பார்த்த சம்பவம் தொடர்பில் பழனிதாசுக்கும் இன்னொரு மாணவருக்கும் வாக்குவாதம் எழுந்தது.
அதனைத் தொடர்ந்து, கார் நிறுத்தப் பூங்காவிற்கு வருமாறு அம்மாணவரிடம் கூறிய பழனிதாஸ், பின்னர் அங்கு அவரைக் கத்தியால் வெட்டினார்.
அங்கிருந்து தப்பித்த அம்மாணவர், தம் தந்தையைத் தொடர்புகொண்டு உதவிகோரினார். அதனையடுத்து, அவரின் தந்தை காவல்துறைக்குத் தகவல் தந்தார்.
வெட்டுப்பட்ட மாணவர் சாங்கி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு நான்கு நாள்கள் மருத்துவ விடுப்பு தரப்பட்டது.
சம்பவத்திற்குப்பின் கல்விக் கழகத்தைவிட்டு வெளியேறிய பழனிதாஸ், தாக்குதலுக்குப் பயன்படுத்திய கத்தியை வீசியெறிந்துவிட்டார். பின்னர் 2021 பிப்ரவரி 17ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.

