செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
64b8195b-0b91-4328-bc47-fdf54d42c624
-

சட்டவிரோத ஒன்றுகூடலில் பங்கேற்ற வெளிநாட்டவருக்கு $3,000 அபராதம்

கொவிட்-19 பரவல் காலகட்டத்தில் சீனப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக அலுவலகத்தில் 15 பேர் ஒன்றுகூடினர். 2021 பிப்ரவரி 25ஆம் தேதி அதிகாலை இந்நிகழ்வு இடம்பெற்றது. மிகுதியான சத்தத்தைக் கேட்டு ஒருவர் காவல்துறைக்குத் தகவல் தந்ததை அடுத்து, இந்தச் சட்ட விரோத கொண்டாட்டம் வெளிச்சத்திற்கு வந்தது. பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளால், அச்சமயத்தில் எண்மருக்கு மேல் ஒன்றுகூட அனுமதியில்லை. அக்கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒருவரான சீனாவின் சன் மின் சியான், 33, என்ற பெண் தமது குற்றத்தை ஒத்துக்கொண்டார். இதையடுத்து, அவருக்கு $3,000 அபராதம் விதிக்கப்பட்டது. சிங்கப்பூரர்கள் எழுவர், சீனர்கள் மூவர், மலேசியர் ஒருவர் என, அந்நிகழ்வில் பங்கேற்ற மற்ற 11 பேர்மீது ஏற்கெனவே சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. எஞ்சிய மூன்று சீனர்கள் மீதான வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.

$1.6 மி. மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

மோசடியில் சிக்கி ஏமாந்தவர்களிடம் இருந்து கிடைத்த $1.6 மில்லியனுக்கும் அதிகமான தொகையைக் கைமாற்றிவிட உதவிய சந்தேகத்தின்பேரில் 36 வயது ஆடவர்மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது. முதலீட்டு மோசடிகள் தொடர்பில் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர்-நவம்பர் காலகட்டத்தில் காவல்துறைக்கு 22 புகார்கள் வந்தன. அவற்றில் சிக்கி ஏமாந்தவர்கள் செய்த 150க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் மூலம் $1.6 மில்லியனுக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டது. இரு மெய்நிகர் கணக்குகளுக்கும் உள்ளூர் வங்கி ஒன்றில் ஆடவர் ஒருவரின் கணக்கிற்கும் அந்தப் பணப் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. 'கென்னி' என்பவரின் சார்பில் பணத்தைப் பெற அந்த ஆடவர் ஏற்பாடு செய்தார் என்று காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. 2020 செப்டம்பர் 30ஆம் தேதி தமது கணக்குகளில் இருந்து $237,000 தொகையை எடுத்து, அடையாளம் தெரியாத இன்னொருவருக்கு அவர் தந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. தங்களது வங்கிக் கணக்குகளை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்குக் காவல்துறை வலியுறுத்துகிறது. அதேபோல, குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதைத் தவிர்க்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கள்ள சிகரெட்டுகளைப் பதுக்கியதாக ஆடவர் இருவர்மீது குற்றச்சாட்டு

தீர்வை செலுத்தப்படாமல் 500 அட்டைப் பெட்டிகளுக்கும் அதிகமான சிகரெட்டுகளைப் பதுக்கி வைத்திருந்ததாக இருவர்மீது நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சுமத்தப்பட்டது. இம்மாதம் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, யூனோஸ் அவென்யூ 3க்கு அருகேயுள்ள ஒரு தொழிலகக் கட்டடத்தில் சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தி, அவ்விரு சிங்கப்பூரர்களையும் கையும் களவுமாகப் பிடித்தனர். 41 மற்றும் 60 வயதான அவ்விரு ஆடவர்களும் $73,430 தீர்வை ஏய்ப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர். அவர்கள் குற்றமிழைத்தது உறுதி செய்யப்பட்டால், தாங்கள் ஏய்த்த தீர்வை, பொருள் சேவை வரியைப்போல 40 மடங்குவரை அபராதமும் ஆறாண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.