கொவிட்-19 தொடர்பான, தொடர்பில்லாத சுவாசப் பிரச்சினைகள் காரணமாகக் கடந்த ஏழு வாரங்
களாக கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத் தொடக்கத்திலிருந்து இம்மாதத்தின் முதல் மூன்று வாரங்கள் வரை சுவாசப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு உயர்ந்
திருப்பதாக கேகே மகளிர், சிறார் மருத்துவமனையின் சிறார்
மருத்துவப் பிரிவின் தொற்றுநோய் மருத்துவச் சேவைத் தலைவர் இணைப் பேராசிரியர் தூன் கோ செங் கூறினார்.
சற்று கடுமையான அறிகுறி
களுடன் மருத்துவமனையில் அனு
மதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அவர் கூறினார்.
அவர்களில் ஏறத்தாழ 50 விழுக்காட்டினர் ஐந்து வயதுக்கும் குறைவான சிறுவர்கள்.
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள இந்த வயதுப் பிரிவினர் இன்னும் தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்டுள்ள ஏனைய சிறுவர்கள் ஐந்து வயதுக்கும் 12
வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
அவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரில் பெரும்பாலானோர் 12 வயதுக்கும் குறைவானவர்கள் என்று சிங்கப்பூருக்கான மருத்துவச் சேவைகள் இயக்குநர் கென்னத் மாக் கடந்த வெள்ளிக்கிழமையன்று தெரிவித்திருந்தார்.
கொவிட்-19 தொடர்பான, தொடர்பில்லாத சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, கேகே மகளிர், சிறார் மருத்துவமனை
யிலும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை ஏற்றம் கண்டிருப்பதாக பேராசிரியர் மாக் தெரிவித்தார்.
இப்பிரச்சினையால் ஒரே வாரத்தில் மருத்துவமனையில் அனு
மதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை இரட்டிப்படைந்
திருப்பதாக பேராசிரியர் தூன் கூறினார்.
ஆனால் இதுகுறித்த புள்ளிவிவரங்களை அவர் வெளியிடவில்லை.
சமூக அளவில் ஒன்றுகூடல்கள் அதிகரித்திருப்பதாலும் கொவிட்-19 கிருமிப் பரவல் குறித்து பொதுமக்களிடையே நிலவி வரும் மெத்தனப்போக்காலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் தூன் கூறினார்.
ஓமிக்ரான் கொவிட்-19 கிருமி வகை காரணமாக இம்மாதம் சமூக அளவில் மேலும் பலருக்குக்
கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதை அவர் சுட்டினார்.
கொவிட்-19 நெருக்கடிநிலை தொடங்கியதிலிருந்து சிங்கப்பூரில் 12 வயதுக்கும் குறைவான மொத்தம் 17,699 சிறுவர்களுக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் 2,586 பேர் மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பதிவிட்டார்.
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் அனுமதிக்கப்
படுவோர், வீட்டிலிருந்து குணம் அடையும் திட்டத்துக்குத் தகுதி பெற்றால் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவிட்டு திரும்புவதாக பேராசிரியர் தூன் கூறினார்.
வீட்டிலிருந்து குணமடையும் திட்டத்துக்குத் தகுதி பெறாதவர்கள் மருத்துவமனையில் அதிகபட்சம் ஏழு நாள்களுக்குத் தங்கலாம் என்றார் அவர்.
ஏற்கெனவே ஆஸ்துமா, புரோன்கியாட்டிஸ், நிமோனியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டால் அவர்களது உடல்நிலை மேலும் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும்.
அவர்களுக்குக் காய்ச்சல், வலிப்பு, நீரிழப்பு ஆகியவை ஏற்
படக்கூடும் என்று பேராசிரியர் தூன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் இம்மாதம் 16ஆம் தேதி வரை கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 12 வயதுக்கும் குறைவான 14,380 சிறுவர்களில் நால்வருக்குக்
கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
அவர்களுக்குக் கூடுதல் உயிர்வாயு அல்லது தீவிர சிகிச்சை தேவைப்பட்டது.
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சிறுவர்களுடன் பதிவு செய்யப்பட்ட பராமரிப்பாளர் மருத்துவமனையில் தங்கலாம் என்றார் பேராசிரியர் தூன்.

