மேலும் 4,560 பேருக்கு
கொவிட்-19 கிருமித்தொற்று
சிங்கப்பூரில் நேற்று முன்தின நிலவரப்படி மேலும் 4,560 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் 65 விழுக்காட்டினருக்குக் கிருமித்தொற்று இருப்பது ஏஆர்டி பரிசோதனை மூலம் தெரியவந்தது. அவர்களுக்கு கொவிட்-19 அறிகுறிகள் இல்லை அல்லது இலேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய 1,577 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மூலம் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
வெளிநாடுகளிலிருந்து வந்த 272 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தின நிலவரப்படி சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 327,602. சிங்கப்பூரில் இதுவரை 850 பேர் கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக மாண்டுவிட்டனர்.
சிங்கப்பூர் மக்கள்தொகையில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி பெற்றவர்களில் 91 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுவிட்டனர்.
மொத்த மக்கள்தொகையில் 56 விழுக்காட்டினர் 'பூஸ்டர் 'எனப்படும் கூடுதல் தடுப்பூசி போட்டுவிட்டனர்.
தற்போதைய நிலவரப்படி கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக சிங்கப்பூரில் மொத்தம் 580 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 44 பேருக்குக் கூடுதல் உயிர்வாயு தேவைப்படுகிறது. 11 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திறனாளர் பற்றாக்குறை
மோசம் அடையக்கூடும்
புதிய வேலையைத் தேடி வெகு சிலரே களமிறங்கியிருப்பதால் திறனாளர் பற்றாக்குறை மோசமடையக்கூடும் என்று என்டியுசி லெர்னிங்ஹப் தெரிவித்துள்ளது.
பத்தில் ஆறு முதலாளிகள் புதிய ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் பத்தில் ஓர் ஊழியர் மட்டுமே புதிய வேலை தேடுவதாகத் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய வேலை, சம்பளம், வேலைப் பாதுகாப்பு ஆகியவை திருப்திகரமாக இருப்பதை ஊழியர்கள் பலர் சுட்டினர். இதனால் வேறு வேலையைத் தேடவில்லை என்று அவர்கள் கூறினர்.

