செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
cfe3cb2b-ec7f-4432-be52-5f4befe79952
-

காமன்வெல்த் சம்பவம்: ஐவர் கைது

காமன்வெல்த் பகுதியில் இம்மாதம் 14ஆம் தேதியன்று நிகழ்ந்த கத்திக் குத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் 22லிருந்து

40 வயதுக்கு உட்பட்ட ஆண்கள். அவர்கள் இம்மாதம் 18ஆம் தேதிக்கும் கடந்த செவ்வாய்க்கிழமைக்கும் இடைப்பட்ட காலத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

கைதானோரில் ஒருவர் தாக்கப்பட்டவரிடம் பணம் கொடுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது. வர்த்த ரீதியாக எழுந்த கருத்து வேறுபாட்டிற்காக தாக்குதலை ஏற்றுக்கொள்ளக் கோரி அவருக்குப் பணம் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

கைதான இதர நால்வர், இடைத்தரகர்களாக இருந்ததாக சந்ேதகிக்கப்படுகிறது.

'ஆகாயவெளி ஒப்பந்தம் இருதரப்பு உறவைச் சீராக்கலாம்'

தங்களின் ஆகாயவெளி எல்லைப் பகுதிகளை மாற்றியமைத்துக்கொள்ள சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையே கையெழுத்தான விமானத் தகவல் வட்டார ஒப்பந்தம், இருதரப்பு உறவை சீராக்கலாம் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். இதனால் கருத்து வேறுபாடுகள் நிலவிய வண்ணம் இருந்த ஒரு பிரச்சினை ஜகார்த்தாவிற்கு ஓய்ந்தது என்பது கவனிப்பாளர்களின் கருத்து.

இந்த ஒப்பந்தத்தின்படி ஜகார்த்தா, சிங்கப்பூர் ஆகிய இரண்டின் ஆகாயவெளி எல்லைப் பகுதிகளும் இந்தோனீசியாவின் எல்லைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படும். மாற்றியமைக்கப்பட்ட தனது விமானத் தகவல் வட்டாரத்தின் சில பகுதிகளை இந்தோனீசியா, சிங்கப்பூருக்காக ஒதுக்கும்.

'யுபிசாஃப்ட்' மீது நடவடிக்கை இல்லை

பிரபல கணினி விளையாட்டு நிறுவனமான 'யுபிசாஃப்ட்' (படம்) மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்று 'டஃபெப்' எனும் நடுநிலையான வேலைவாய்ப்பு நடைமுறைகளுக்கான முத்தரப்புக் கூட்டணி தெரிவித்துள்ளது. 'யுபிசாஃப்ட்'டில் பாலியல் ரீதியாகத் தொந்தரவு தரப்படுவதாகவும் பாரபட்சப் போக்கு இருப்பதாகவும் கூறப்பட்டதைத் தொடர்ந்து 'டஃபெப்' நடத்திய விசாரணை நிறைவடைந்தது.

'அசெசின்ஸ் கிரீட்' உள்ளிட்ட விளையாட்டுகளை உருவாக்கியதன் தொடர்பில் பிரபலமடைந்த 'யுபிசாஃப்ட்', வேலையிடத் தொந்தரவு குறித்து தன்னிடம் வந்த புகார்களை சரிவரக் கையாண்டதாக 'டஃபெப்' வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. மேலும், எல்லா ஊழியர்களுக்கும் பாரபட்சமின்றி சம்பளம் வழங்கும் முறை 'யுபிசாஃப்ட்'டில் இருப்பதாக அது சுட்டியது. இந்த முறை, குடியுரிமை, இனம் ஆகியவற்றின் அடிப்படையில் சிங்கப்பூரர்களுக்குப் பாரபட்சம் காட்டும் வகையில் அமையவில்லை என்றும் 'டஃபெப்' சொன்னது.

முதியவரை நிர்வாணமாகப் படமெடுத்தவருக்குச் சிறை

தான் பராமரித்துவந்த முதியவரைக் குளிப்பாட்டிவிடும்போது அவரை நிர்வாணமாகக் காணொளியில் பதிவுசெய்த பணிப்பெண்ணுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பணிப்பெண் தனது கைபேசியைக் கொண்டு அந்த காணொளியைப் பதிவுசெய்தார்.

அதற்குப் பிறகு அந்தக் காணொளியை வாட்ஸ்அப் வழி வேறொருவருடன் பகிர்ந்துகொண்டார். மேலும், 'டிக்டாக்' செயலியின் மூலமும் அதிகம் நடமாட்டம் இல்லாத அந்த முதியவரைக் காணொளியில் பதிவுசெய்தார்.

ஒருவரின் அனுமதியின்றி அவரை நிர்வாணமாகக் காணொளியில் பதிவுசெய்த இரண்டு குற்றச்சாட்டுகளை 33 வயது பணிப்பெண் ஒப்புக்கொண்டார். அவருக்கு 17 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளியின் பெயரை வெளியிட அனுமதி கிடையாது.

முதியவரின் அனுமதியின்றி அவர் இடம்பெற்ற காணொளிகளை வெளியிட்டதன் தொடர்பிலான மேலும் இரு குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார்.