அந்நியருக்காக 22 வயது ஆடவர் ஒருவர் தனது பெயரில் வங்கிக் கணக்கைத் திறந்திருக்கிறார். அவ்வாறு செய்வதற்கு வெகுமதியாக 500 வெள்ளி தரப்போவதாக வில்சன் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஒருவர் கூறியிருந்தார்.
அதற்குப் பிறகு அந்த வங்கிக் கணக்கை அடையாளம் தெரியாதவர்கள் ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடிச் செயல்களுக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இணைய வர்த்தக மோசடிச் செயல்களின் மூலம் சுமார் ஐந்து நாள்களில் எட்டு பேரிடமிருந்து 35,000 வெள்ளிக்கும் மேலான தொகை பறிக்கப்பட்டது.
ஏமாற்றியதற்காக முகம்மது ஹஃபிசுதீன் ஹசானுதீனுக்கு மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கணினியின் தவறான பயன்பாட்டுக்கான சட்டத்தின்கீழ் அவர் மீது சுமத்தப்பட்ட மேலும் ஒரு குற்றச்சாட்டும் தீர்ப்பளிக்கும்போது கருத்தில்கொள்ளப்பட்டது.
முகம்மது ஹஃபிசுதீன் நேற்று முன்தினம் தனது சிறைத் தண்டனையை நிறைவேற்றத் தொடங்கினார்.
"பணத்துக்காக இணைய மோசடிக்காரர்கள் பயன்படுத்துவதற்குத் தனது வங்கிக் கணக்கை விட்டுக்கொடுத்த முதல் அரசுத்தரப்பு வழக்கு இது. வங்கிக் கணக்கை மோசடிக்காரர்கள் எவ்வாறு பயன்படுத்துவர் என்பதை அறவே எண்ணாமல் மேற்கொள்ளப்பட்ட செயல் இது," என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் எஸ்தர் வோங் கூறினார்.
குற்றவாளிக்கு மூன்றிலிருந்து நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்குமாறு திருவாட்டி வோங் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். சென்ற ஆண்டின் முற்பாதியில் மட்டும் 19,444 மோசடிச் சம்பவங்கள் குறித்து புகார்கள் அளிக்கப்பட்டதை அவர் சுட்டினார். இணையம் வழி நடத்தப்பட்ட மோசடிகளில் குறைந்தது 2.4 மில்லியன் வெள்ளி பறிக்கப்பட்டது.

