5 முதல் 11 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் திட்டம்
ஐந்து முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்குத் கொவிட்-19 தடுப்பூசி போடும் தேசிய திட்டம் தொடங்கப்பட்டு ஒரு மாதம் கழிந்த நிலையில் 175,000க்கு மேற்பட்ட சிறார்களுக்குக் குறைந்தது ஒரு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அவர்களில் 25,000க்கு மேற்பட்ட சிறார்களுக்கு இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்டு விட்டன. அவர்களில் கல்வி அமைச்சர் சான் சுன் சிங்கின் மூன்று பிள்ளைகளில் ஆக இளையவரும் அடங்குவார்.
இந்த விவரங்களை நேற்று தமது ஃபேஸ்புக் பதிவில் வெளியிட்ட அமைச்சர் சான், உடன்பிறந்தவர்களுடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள அவர்கள் செல்லும் நாள் வரை காத்திராமல், தங்கள் பிள்ளைகளுக்கு முன்னரே தடுப்பூசி போடும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதை பெற்றோர் பலர் வரவேற்றுள்ளனர் என்றார்.
இம்மாதம் 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் ஐந்திலிருந்து 11 வயது வரையிலான சிறார்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் தடுப்பூசி நிலையத்துக்கு முன்பதிவின்றி தங்கள் பெற்றோருடன் சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகின்றனர். இந்த ஏற்பாடு திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை நடப்பில் இருக்கும்.
முன்னதாக, திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தடுப்பூசி போட்டுக்கொள்ள செல்லும் தங்கள் உடன்பிறந்தவர்களுடன்தான் ஐந்திலிருந்து முதல் 11 வயது வரையிலான சிறார்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இந்த ஆகக் கடைசி ஏற்பாட்டின்படி, இந்த வாரம் 5,600 சிறார்கள் தடுப்பூசி நிலையங்களுக்குச் சென்று தடுப்பசி போட்டுக் கொண்டுள்ளனர் என்று திரு சான் விவரித்தார்.
முன்பதிவின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள இம்மாதம் 31ஆம் தேதியை அதாவது சீனப் புத்தாண்டு தினத்துக்கு முந்தைய நாளைத் தேர்வு செய்திருக்கும் பெற்றோர், அன்றைய தினம் பிற்பகல் 1 மணிக்குள்ளாக சென்று விடுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார். அன்றைய தினம் தடுப்பூசி நிலையங்கள் வழக்கத்துக்கு முன்பாக மூடப்படும் என்பதே அதற்குக் காரணம்.
பிப்ரவரி 1 மற்றும் 2ஆம் தேதிகளின் சீனப் புத்தாண்டு விடுமுறை காரணமாக தடுப்பூசி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்.
முன்பதிவின்றி தங்கள் பிள்ளைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நாட்களை வெள்ளிக்கிழமைக்கும் வாரயிறுதி நாட்களுக்கும் நீட்டிக்க முடியுமா என்று பெற்றோர் சிலர் கேட்டுள்ளனர் என்று குறிப்பிட்ட திரு சான், வெள்ளிக்கிழமையிலும் வாரயிறுதி நாட்களிலும் இயல்பான தடுப்பூசி முன்பதிவுகள் நிறைவடைந்திருப்பதே அதற்குக் காரணம் என்று விளக்கினார்.
இன்னும் அதிகமான சிறார்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, சம்பந்தப்பட்ட அமைப்புகளும் சுகாதார அமைச்சும் முன்பதிவுகளைக் கண்காணித்து, குடும்பங்களுக்கு ஏதுவாக ஏற்பாடுகளை மாற்றி அமைப்பது பற்றி பரிசீலிக்கும் என்றார் திரு சான்.
இம்மாதத் தொடக்கத்தில் கல்வி அமைச்சும் ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த இணையக் கருத்தரங்கு பற்றிய காணொளி ஒளிப்பதிவு பற்றி பெற்றோருக்குக் கேள்விகள் இருந்தால் அதை அமைச்சுக்குத் தெரியப்படுத்தலாம் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இந்தக் காணொளி கல்வி அமைச்சின் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இம்மாதம் 23ஆம் தேதி வரை, 12 வயதுக்கு உட்பட்ட 17,699 சிறார்களுக்கு கொவிட்-19 கிருமி தொற்றியுள்ளது.
அவர்களில் 2,586 சிறார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

