சீனா குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழாவில் அதிபர் ஹலிமா பங்கேற்கிறார்
சீனாவில் அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகளின் தொடக்கவிழாவில் பங்கேற்க அதிபர் ஹலிமா யாக்கோப் சீனா செல்கிறார் என்று வெளியுறவு அமைச்சின் அறிக்கை நேற்று கூறியது. பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து அதிபர் ஹலிமா மேற்கொள்ளும் முதலாவது பணி நிமித்த வெளிநாட்டுப் பயணம் இது.
சீனாவில் அதிபர் ஹலிமா, சீன அதிபர் ஸி ஜின்பிங், பிரதமர் லி கெச்சியாங் ஆகியோருடன் பேச்சு நடத்து வதுடன் சீனாவுக்கு வரும் அரசாங்கத் தலைவர்கள், நாட்டுத் தலைவர்கள், அரச குடும்பத்தினர், அனைத்துலக அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோருக்கு சீன அதிபர் அளிக்கும் வரவேற்பு விருந்திலும் கலந்துகொள்வார்.
அதிபருடன், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வர்த்தக தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங், அதிபர் அலுவலகம், வெளியுறவு அமைச்சு, கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளும் செல்கின்றனர். அதிபர் நாட்டில் இல்லாத காலத்தில், அதிபர் ஆலோசனை மன்றத்தின் தலைவர் திரு எடி டியோ, அதிபரின் பணிகளைக் கவனித்துக்கொள்வார்.
குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் பிப்ரவரி 4 முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும். உலகில் குளிர்கால மற்றும் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளை ஏற்று நடத்தி யுள்ள ஒரே நகரமாக பெய்ஜிங் திகழ்கிறது. இந்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்கில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து எந்த போட்டியாளரும் பங்கேற்கவில்லை.
மருத்துவமனைகளில் 611 கொவிட்-19 நோயாளிகள்; 12 பேருக்கு தீவிர சிகிச்சை
சிங்கப்பூர் மருத்துவமனைகளில் இன்னும் 611 கொவிட்-19 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 49 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிர்வாயு உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அப்படி என்றால் புதன் கிழமை இருந்ததைவிட மேலும் 31 பேர் மருத்துவமனையில் உள்ளனர். ஐவருக்கு உயிர்வாயு சிகிச்சை தேவைப்படுகிறது. மேலும் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
வாராந்திர கிருமித்தொற்று விகிதம் 2.37 ஆக உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட விகிதம், வாராந்திர கிருமித்தொற்று அதிகரித்து வருவதைக் குறிக்கிறது. நேற்று முன்தினம் புதிய சமூக தொற்று எண்ணிக்கை 5,090. அது முந்தைய நாளின் 4,560 சம்பவங்களைவிட அதிகம்.
நேற்று முன்தினம் உள்ளூர் சம்பவங்களில் 70% அதாவது 3,553 சம்பவங்கள் ஏஆர்டி பரிசோதனைகள் வழியாகவும் எஞ்சிய 1,537 சம்பவங் கள் பிசிஆர் பரிசோதனைகள் வழியாகவும் கண்டுபிடிக்கப் பட்டன. 379 தொற்றுச் சம்பவங்கள் சிங்கப்பூருக்கு வந்த பயணிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டன.
சிங்கப்பூரில் இதுவரை 333,071 கொவிட்-19 சம்பவங் களும் அவற்றில் 850 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. சிங்கப்பூரில் இதுவரை 91 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுள்ளனர். அவர்களில் 57 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் கூடுதல் தடுப்பூசி போட்டுள்ளனர்.
2007க்கு பிறகு 2021ல் ஆக அதிக மழை
2007க்கு பிறகு கடந்த ஆண்டு சிங்கப்பூரில் ஆக அதிக மழை பெய்தது. கடந்த ஆண்டு கனமழை தீவைப் புரட்டிப் போட்டது. புக்கிட் தீமா உள்ளிட்ட பல பகுதிகளில் பலமுறை திடீர் வெள்ளம் ஏற்பட்டது. தென்கிழக்காசியாவில் கூடுதல் மழையைக் கொண்டு வரும் 'லா நினா' பருவநிலை மாற்றம், 2007லும் கடந்த ஆண்டிலும் இடம்பெற்றது.
சிங்கப்பூரில் பருவநிலை குறித்து வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு தீவு முழுவதும் சராசரியாக 3,167.7 மில்லிமீட்டர் மழை பெய்ததாகக் கூறியது.
2007ல் சராசரியாக 3,266.1 மில்லிமீட்டர் மழை பெய்து இருந்தது. மழைநீர் தகவல் சேகரிப்பு முறை 1980ல் தொடங்கியது முதல், ஆக அதிக மழை பதிவாகியிருப்பது 2007ல்தான். "2021ன் பெரும்பகுதியில் லா நினா பருவநிலை மாற்றத்தால், வழக்கத்தைவிட அதிக மழை பெய்தது," என்று வானிலை ஆய்வு மையம் கூறியது.
'லா நினா'வுக்கு எதிர்மறை நிகழ்வானது 'எல் நினோ'. அதனால் தென்கிழக்காசியாவில் பொதுவாக வெப்பமான, வறட்சியான வானிலை ஏற்படுகிறது.
'எல் நினோ'வால் உலகளாவிய வெப்பநிலை குறுகிய காலத்திற்கு அதிகரிக்கும். மற்றொருபுறம், 'லா நினா'வால் நேர்மாறான தாக்கம் ஏற்படும்.
பிப்ரவரி 14ல் நாடாளுமன்றக் கூட்டம்
பிப்ரவரி 14ஆம் தேதி திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் என நாடாளுமன்ற அலுவலர் நேற்று தெரிவித்தார்.

