ஓமிக்ரான் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில், சீனப் புத்தாண்டுக் காலத்தில் சைனாடவுனைச் சுற்றியுள்ள பகுதிகள், பூங்காக்கள், உணவு, பானக் கடைகள் ஆகியவற்றில் பாதுகாப்பு நிர்வாகம் தொடர்பான கூடுதல் அமலாக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவுநேரக் கேளிக்கை விடுதிகள் உட்பட உணவு, பானக் கடைகள் முழுவதிலும் பல்வேறு அமைப்புகள் தங்கள் சோதனை நடவடிக்கைகளை அதிகரிக்கும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு நேற்று தெரிவித்தது.
"இந்த விழாக்காலத்தில், பாதுகாப்பு இடைவெளித் தூதர்களும் அமலாக்க அதிகாரிகளும் நாள்தோறும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வார்கள்.
"சைனாடவுன் காம்பிளக்ஸில் உள்ள சந்தை, உணவங்காடி நிலையங்களில் பாதுகாப்பு இடைவெளித் தூதர்கள் நிறுத்தப்படுவார்கள். அங்கு 300 பேர் வரம்பு எட்டப்பட்டதும் மேலும் மக்கள் அங்கு செல்வதை அவர்கள் தடுத்து நிறுத்துவார்கள்.
"தேசிய பூங்காக் கழகம் நிர்வகிக்கும் பூங்காக்களில் உள்ள கூடார முகாம்கள், 'பாபக்கியூ' இடங்கள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்," என்றும் அமைச்சு கூறியது.
"பூங்காக்களில் உள்ள திடல்கள், கட்டாந்தரை விளையாட்டுக் கூடங்கள், கூரையுடன் கூடிய ஒதுங்குமிடங்கள், கார் நிறுத்தங்கள் ஆகிய இடங்களில் கூட்டம் அளவுக்கு அதிகமாகக் கூடினால் அந்த இடங்களையும் தேசிய பூங்காக் கழகம் தற்காலிகமாக மூடிவிடும்.
"இந்த விழாக்காலத்தில், முதியவர்கள், குறிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர், சந்தைகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மாறாக, அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது இளைய நண்பர்கள் ஆகியோரை உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்களை வாங்கிவரச் சொல்லலாம்," என்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு விவரித்தது.
"இந்த விழாக்காலத்தில் அன்புக்குரியவர்கள் ஒன்றுகூடுவது வழக்கம் என்றாலும் அதிகரித்து வரும் ஓமிக்ரான் கிருமித்தொற்றைக் கருத்தில் கொண்டு, மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதும் இப்போது அவசியமாகிறது.
"ஆகவே, நடப்பில் உள்ள பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளைப் பின்பற்றி நமது சமூகப் பொறுப்புஉணர்வை வெளிப்படுத்துவோம். இதன் மூலம் விழாக்காலக் கொண்டாட்டத்தை நாம் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் வெளிப்படுத்த லாம்," என்றும் அமைச்சு வலியுறுத்தியது.

