யுஓபி வங்கி தனது வருடாந்திர சீனப் புத்தாண்டு நிதித் திரட்டு முயற்சியில் $700,000க்கு மேற்பட்ட தொகையைத் திரட்டியுள்ளது என்று தனது செய்தி அறிக்கையில் நேற்று முன்தினம் கூறியது.
அந்தத் தொகை, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைக்காசு நிதித் திட்டம், பிசினஸ் டைம்ஸ் வளர்ந்து வரும் கலைஞர்கள் நிதித் திட்டம் போன்ற நன்கொடை அமைப்புகள் மூலம் கலை, பிள்ளைகள், கல்வி தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும்.
நிதித் திரட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக, யுஓபி பரிசுப் பொருள் தயாரிக்கும் பயிலரங்கை நடத்தியது. அதில் யுஓபி மேல் மட்ட அதிகாரிகளும் வாடிக்கையாளர்களும் பங்கேற்று புலி ஆண்டைக் குறிக்கும் வகையில் தங்க நிறத்திலான புலி கொண்ட படத்தில் 'ஃபூ' எனும் சொல்லை எழுதினார்கள். 'ஃபூ' என்றால் நல்லாசி என்று அர்த்தம்.
பின்னர் அவர்கள் $10,000 நன்கொடை அளித்து அந்த படத்தைப் பெற்றுச் சென்றனர்.
பின்னர் யுஓபி, பெற்ற நன்கொடைக்கு ஈடாக $250,000 வரை வெள்ளிக்கு வெள்ளி தொகையை நிரப்பியது.
"புதிய தொடக்கத்தைக் கொண்டாடுவது இந்த சீனப் புத்தாண்டு காலத்துக்கு மிகப் பொருத்தமானது. கலைகள் மூலம் நாம் சமூகத்துடன் இணைகிறோம், நமது வாடிக்கையாளர்களுடன் உறவை வலுப்படுத்திக்கொள்கிறோம். அதேவேளையில் உதவி தேவைப்படுவோருக்கு ஆதரவளிக்கிறோம்.
"ஆண்டுதோறும் இந்த விழாக்காலத்தில் நம்முடன் இணைந்து மகிழ்ச்சியையும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையையும் வளர்க்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நன்றி கூறுகிறோம்," என்றார் யுஓபி வங்கியின் துணைத் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு வீ ஈ சியோங்.

