கொவிட்-19 கிருமித்தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில் 2020 ஜூன் மாதத்தில் தங்குவிடுதியில் உள்ள 5,000க்கு மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, அவர்கள் கைபேசிச் செயலிகளைப் பயன்படுத்தி, தங்கள் உடல் வெப்பநிலையைத் தெரிவிக்க வேண்டியிருந்தது.
ஆனால், வழிகாட்டி விதிமுறைகள் ஆங்கிலத்தில் இருந்ததால், மொழி தெரியாத அந்த ஊழியர்கள் சிரமப்பட்டனர்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஒரு குழுவினர் செயலில் இறங்கினர்.
கொக்லிஸன்ட் நிறுவனத்தின் திருமதி பிரதிபா குர்னூல், தமது சகாக்களை ஒன்றுதிரட்டி, அறிவார்ந்த தேசம் மற்றும் மின்னிலக்க அரசாங்கக் குழுவுடன் சேர்ந்து வழிகாட்டிகளை விளக்கும் காணொளிகளை வங்காள, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட்டார்.
சவால்மிக்க காலத்தில் சிறப்பாக செயல்பட்டு, பிரச்சினைக்குத் தீர்வு கண்ட திருமதி பிரதிபா உட்பட நால்வருக்கு நேற்று அறிவார்ந்த தேசத் தூதர்களுக்கான நட்சத்திர விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
ஹார்ட்பீட்@பிடோக் வளா கத்தில் நேற்று விருதுகளை வழங்கிய தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ, "அறிவார்ந்த தேசத் தூதர்கள் தங்களின் சிறப்பான ஆற்றல்களைப் பயன்படுத்தி, சமூகத்தில் நிலவும் மின்னிலக்க இடைவெளியை இணைக்கும் பாலமாக பல வகையில் திறம்படச் செயல்பட்டிருக்கிறார்கள்," என்று பாராட்டினார்.

