தொடர்ந்து பலமுறை மானபங்க குற்றத்தில் ஈடுபட்டு 2018ஆம் ஆண்டில் 21 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டும் திருந்தாத ஆடவருக்கு இம்முறை மூன்று ஆண்டுகள், ஏழு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரரான 49 வயது சிம் டெக் சாய் 2020ஆம் ஆண்டில் மூன்று பெண்களை மானபங்கம் செய்தார்.
தம்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
ஒருவரின் விருப்பமில்லாமல் அவரைத் தொடுவது குற்றம் என்றும் அவ்வாறு செய்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் சிம்முக்குத் தெரியும் என்று அவரைப் பரிசோதனை செய்த மனநல மருத்துவர் கூறியதை மாவட்ட நீ்திபதி மார்வின் பே சுட்டினார்.
துரதிர்ஷ்டவசமாக மாட்டிக்கொண்டதாக மனநல மருத்து
வரிடம் சிம் கூறியது தமக்குக் கவலை அளிப்பதாக நீதிபதி தெரிவித்தார். தமது குற்றச் செயல்களுக்கு சிம் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றார் அவர்.
2013ஆம் ஆண்டிலிருந்து மானபங்க குற்றம் புரிந்ததற்காக சிம்முக்கு ஏழு முறை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் எம்ஆர்டி ரயிலில் பெண் ஒருவரை சிம் மானபங்கம் செய்தபோது கையும் களவுமாகப் பிடிப்பட்டார். அவர் அந்தப் பெண்ணை மானபங்கம் செய்வதைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம் வந்தது.
2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதியன்று 23 பெண்ணை சிம் மானபங்கம் செய்தார்.
அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதியன்று பேருந்து ஒன்றில் 15 வயது சிறுமியை சிம் மானபங்கம் செய்தார்.
ஆகஸ்ட் 28ல் பேருந்து ஒன்றில் 17 வயது சிறுமியை அவர் மானபங்கம் செய்தார்.

