மின் சிகரெட்டுகளை மீண்டும் நிரப்பும் கலன்களை சிங்கப்பூருக்குள் கடத்தும் முயற்சியை குடி
நுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமையன்று முறியடித்தனர்.
மலேசியாவிலிருந்து லாரியில் துவாஸ் சோதனைச்சாவடிக்குக் கொண்டு வரப்பட்ட மொத்தம் 25,590 கலன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
லாரியை அதிகாரிகள் பரிசோதனை செய்தபோது அதில் அந்தக் கலன்கள் இருப்பது தெரியவந்தது. ஓட்டுநர் ஓய்வு எடுக்கும் பகுதியில் அவை ஒளித்துவைக்கப்பட்டிருந்தன.
மலேசியாவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர், விசாரணைக்காக சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இம்மாதம் 22ஆம் தேதியன்று மலேசியாவிலிருந்து பழங்களை ஏற்றிக்கொண்டு உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிக்கு வந்த லாரியில் 400 மின் சிகரெட்டுகளும் அவற்றை மீண்டும் நிரப்பும் 8,100 கலன்களும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
சிங்கப்பூரின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கே தொடர்ந்து முன்னுரிமை தரப்படும் என்று குடி
நுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் கூறியது.
சொந்த பயன்பாட்டுக்காக இணையம் மூலம் மின் சிகரெட்டுகளை வாங்கி சிங்கப்பூருக்கு அவற்றைக் கொண்டு வரும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஆறு மாதச் சிறையும் $10,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.