சிங்கப்பூரிலிருந்து சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்ல உதவி குற்றத்துக்காக ஆடவர் ஒருவருக்கு 11 மாதச் சிறையும் $20,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன. அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் போனால் கூடுதலாக ஒரு மாதம் சிறையில் இருக்க வேண்டும்.
சிங்கப்பூரில் நிகழ்ந்த ஆகப் பெரிய முதலீட்டு மோசடி
ஒன்றில் ஈடுபட்டதாக நம்பப்படும் வர்த்தகரான இங் யு சீ நாட்டைவிட்டு தப்பிச் செல்ல 37 வயது ஆல்வின் வீ வெய்சோங் உதவினார். அதற்கு அவருக்கு $50,000க்கும் $100,000க்கும் இடைப்பட்ட ஒரு தொகை வழங்கப்பட்டது.
இங் புரிந்த குற்றம் தொடர்பாக செய்திகளில் வெளியாகி இருப்பதாக ஆல்வின் வீக்கு அவர் சார்பாகப் பணம் தந்த 32 வயது மார்கஸ் ஃபாங் குவான் வெய் கூறியும் உதவி செய்வதை வீ தொடர்ந்தார்.
இந்தக் குற்றத்துடன் தொடர்பில்லாத சூதாட்டக் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தியபோது இங்கைத் தப்பிக்கவைக்க எடுக்கப்படும் முயற்சியைப் பற்றி காவல்துறையினருக்குத் தெரியவந்தது. அதையடுத்து, அந்தத் திட்டத்தை அதிகாரிகள் முறியடித்தனர்.
34 வயது இங், $1.2 பில்லியன் பெறுமானமுள்ள நிக்கல் உலோக வர்த்தகத் திட்டத்தில் மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதியன்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவர் மீது 75 குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளன

