மறுவிற்பனை வீவக வீட்டு விலை கடந்த 11 ஆண்டுகள் காணாத அளவில் 12.7 விழுக்காடு அதிகரித்துள்ளதென வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும், சென்ற ஆண்டு 259 மறுவிற்பனை வீவக வீடுகள் குறைந்தது ஒரு மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டன. ஓராண்டில் இத்தனை வீவக வீடுகள் ஒரு மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டது இதுவே முதல் முறை. 2020ஆம் ஆண்டு 82 வீடுகள் மட்டுமே குறைந்தது ஒரு மில்லியன் வெள்ளிக்கு விற்பனையாயின.
சென்ற ஆண்டு 40 மறுவிற்பனை வீவக வீடுகள் குறைந்தது 1.2 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டன. 2020ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை ஏழாகப் பதிவானது. சென்ற ஆண்டு ஆக அதிக விலைக்கு விற்கப்பட்ட வீவக வீட்டின் விலை 1.36 மில்லியன் வெள்ளி. அந்த வீடு, வடிவமைத்து, கட்டி, விற்பனை செய்யும் திட்டத்தின்கீழ் பீஷானில் கட்டப்பட்ட 'நேச்சுரா லோஃப்ட்' கட்டடத்தில் அமைந்துள்ளது.
சொத்துச் சந்தையைத் தணிக்க சென்ற மாதம் சில நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அப்படியிருந்தும் ஒரு மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான விலைக்கு விற்கப்படும் வீவக வீடுகளின் எண்ணிக்கை குறைவதாகத் தெரியவில்லை. நேற்றைய நிலவரப்படி இம்மாதம் மட்டும் இதுவரை 24 ஒரு மில்லியன் வெள்ளி மதிப்பிலான வீடுகள் விற்கப்பட்டுள்ளன.
தனியார், வீவக வீடுகள் ஆகிய இரண்டின் விலையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்ததால் சென்ற மாதம் சொத்துச் சந்தை தணிப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
2010ஆம் ஆண்டு மறுவிற்பனை வீவக வீடுகளின் விலை 14.1 விழுக்காடு கூடியது. அதற்குப் பிறகு சென்ற ஆண்டுதான் அவற்றின் விலை ஆக அதிக அளவு அதிகரித்தது. 2020ஆம் ஆண்டு மறுவிற்பனை வீவக வீட்டு விலை ஐந்து விழுக்காடு அதிகரித்தது.
சென்ற ஆண்டின் நான்காம் காலாண்டில் மட்டும் வீவக மறுவிற்பனை விட்டு விலை 3.4 விழுக்காடு கூடியது. இது, மூன்றாம் காலாண்டில் பதிவானதைக் காட்டிலும் 0.5 விழுக்காடு அதிகம்.

