தொடர்ந்து ஏழாவது காலாண்டாக தனியார் வீட்டு விலை அதிகரித்துள்ளது. சென்ற மாதம் மட்டும் தனியார் வீட்டு விலை ஐந்து விழுக்காடு கூடியது.
பொருளியல் மீண்டுவருவது, வீடுகளுக்கான தேவை அதிகரித்தது ஆகியவை இதற்குக் காரணங்கள். கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும் வேளையிலும் இந்நிலை உருவாகியுள்ளது.
சென்ற ஆண்டு முழுவதற்கும் தனியார் வீட்டு விலை 10.6 விழுக்காடு அதிகரித்தது. 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்ற ஆண்டுதான் தனியார் வீட்டு விலை அதிகளவு கூடியது.
2020ஆம் ஆண்டு தனியார் வீட்டு விலை 2.2 விழுக்காடு கூடியது. நகர மறுசீரமைப்பு ஆணையம் வெளியிட்ட தகவல்கள் இந்தப் புள்ளி விவரங்களைத் தெரிவித்தன.
இம்மாதம் மூன்றாம் தேதியன்று ஆணையம் வெளியிட்ட முன்னுரைப்புக்கும் பதிவான புள்ளி விவரங்களுக்கும் மாற்றம் இல்லை.
சென்ற ஆண்டு நான்காம் காலாண்டில் தனியார் வீடுகளின் விலை ஆக வேகமாகக் கூடியது. மூன்றாம் காலாண்டில் அவற்றின் விலை 1.1 விழுக்காடு அதிகரித்தது. இரண்டாம் காலாண்டில் 0.8 விழுக்காடும் முதல் காலாண்டில் 3.3 விழுக்காடும் விலை அதிகரித்தது.
எனினும், தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான 'விடிஎல்' பயணப் பாதைகள் கூடுதலாகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டிறுதியில் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றதாலும் சொத்துச் சந்தைத் தணிப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதாலும் சென்ற ஆண்டு நான்காம் காலாண்டில் விற்பனையான தனியார் வீடுகளின் எண்ணிக்கை குறைந்தது.
நான்காம் காலாண்டில் 3,018 தரை வீடு அல்லாத புதிய தனியார் வீடுகள் விற்பனையாயின. இந்த எண்ணிக்கை, மூன்றாம் காலாண்டில் பதிவானதைக் காட்டிலும் கிட்டத்தட்ட 15 விழுக்காடு குறைவு. இந்தப் புள்ளி விவரங்களில் எக்சிக்கியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளின் விற்பனை கணக்கில் எடுக்கப்படவில்லை.
ஆனால், 2021ஆம் ஆண்டு சொத்து மேம்பாட்டாளர்கள் மொத்தமாக 13,027 வீடுகளை விற்றனர். இது, 2020ஆம் ஆண்டு விற்கப்பட்ட வீடுகளைவிட 30.5 விழுக்காடு அதிகம். 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு இத்தனை புதிய வீடுகள் விற்கப்பட்டது இதுவே முதல் முறை என்று 'ஓமைஹோம்' நிறுவனத்தின்ஆய்வு அதிகாரியான மோகன் சந்திரசேகரன் தெரிவித்தார்.
கொள்ளைநோய்ப் பரவலால் எழுந்த வீடுகளுக்கான தேவையும் விற்பனைக்கு விடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை குறைந்ததும் விலை அதிகரித்ததற்கான காரணங்கள் என்று 'ஆரஞ்சு டீ அண்ட் டை' நிறுவனத்தின் ஆய்வுக்கான மூத்த துணைத் தலைவர் கிரிஸ்டீன் சுன் கூறினார்.
சென்ற ஆண்டு நான்காம் காலாண்டில் தரை வீடு அல்லாத தனியார் அடுக்குமாடி, கூட்டுரிமை வீட்டு விலை 5.3 விழுக்காடு அதிகரித்தது. நான்காம் காலாண்டில் தரை வீடுகளின் விலை 3.9 விழுக்காடு அதிகரித்தது.

