ஜூரோங் மீன்பிடி துறைமுகத்தில் கடல் உணவு வகைகளை வாங்கும் கடைக்காரர்கள், மார்ச் மாதத்திலிருந்து இணையத்தில் அவற்றை ஏலம் எடுக்க முடியும்.
கடந்த 53 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஜூரோங் மீன்பிடி துறைமுகம் நவீனமயமாக இருக்கிறது.
அதன் பகுதியாக ஏலக்குத்தகை எடுக்கும் மின்னிலக்க தளம் அமைக்கப்பட உள்ளது.
'போர்ட்65' எனும் பெயர் கொண்ட அந்த மின்னிலக்கத் தளத்தை, சிங்கப்பூரில் உள்ள பெரிய மீன்விநியோக நிறுவனங்களில் ஒன்றான ஹாய் 'சியா சீஃபுட்' அமைக்கவுள்ளது.
மின்னிலக்கத் தளத்துக்கு வரவேற்பு கிடைத்தால், நேரடியாக சென்று வாங்கும் முடிவுக்கு வரக்கூடும்.
வரும் 2028ம் ஆண்டுக்குள், ஜப்பான் தலைநகரம் தோக்கியோவில் உள்ள தோயோசு சந்தையைப் போல ஜூரோங் மீன்பிடி துறைமுகத்தை மீன்பிடி மையமாக மாற்றுவதுதான் குறிக்கோள்.
மின்னிலக்கத் தளத்தைத் தவிர, பதனிடுதல் வசதிகள், மத்திய சமையல் அறை, உணவுச் சேவைகள், தானியங்கி கிடங்கு வசதி போன்றவற்றை அமைக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.
கடந்த 1969ல் தொடங்கப்பட்ட ஜூரோங் மீன்பிடி துறைமுகம், சிங்கப்பூரில் செயல்படும் இரண்டு ஒட்டுமொத்த மீன்பிடிச் சந்தைகளில் ஒன்று ஆகும்.
இன்னொன்று, கடந்த 1997ம் ஆண்டு தொடங்கப்பட்ட செனோக்கா மீன்பிடி துறைமுகம் ஆகும்.

