தெலுக் பிளாங்கா ரைஸில் உள்ள புளோக் 39ன் 10வது மாடி வீடு ஒன்றில் நேற்று காலை நேரத்தில் மூண்ட தீயில் இரண்டு பேர் காயடைந்தனர்.
தீ மூண்ட வீட்டுக்கு நேரே மேலே இருந்த வீட்டில் நினைவற்றுக் கிடந்த ஒரு மாதுக்கு அதிகாரிகள் முதலுதவி சுவாச சிகிச்சை அளித்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அவரும் வேறு ஒருவரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். முன்னெச்சரிக்கையாக ஏறத்தாழ 280 பேர் அப்புறப்படுத்தப்பட்டதாக படை தெரிவித்தது. தீ விபத்துக்கான காரணம் பற்றி புலன்விசாரணை நடக்கிறது.
இவ்வேளையில், வெள்ளிக்கிழமை பின்நேரத்தில் இரண்டு மணி நேர இடைவெளியில் தெம்பனிஸ், பிடோக்கில் இரண்டு தீ விபத்துகள் நிகழ்ந்தன.
தெம்பனிஸ் அவென்யூ 5ல் உள்ள புளோக் 941ல் 10வது மாடி வீடு ஒன்று முற்றிலும் எரிந்தது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் அந்த வீட்டுக்குள் நுழைந்து உள்ளே நினைவற்றுக் கிடந்த ஆடவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஏறக்குறைய 180 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர்.
பிடோக் நார்த் ஸ்திரீட் 1ல் உள்ள புளோக் 204ல் இருக்கும் ஒரு காப்பிக்கடையில் நள்ளிரவில் மூண்ட தீயை இந்தப் படை அணைத்தது.
வீடுகளைவிட்டு வெளியேறி இருந்த பலருக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

