சீனப் புத்தாண்டு கொண்டாட்ட காலத்தின்போது இல்லப் பணிப்பெண்களைக் கொண்டாட்ட மகிழ்ச்சியில் திளைக்க செய்யும் முயற்சியாக அவர்கள் ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசாவில் உள்ள சீ அக்வேரியத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஏறக்குறைய 100 பேர் வார விடுமுறை நாளான இன்று காலை வளர்ப்பு மீன் காட்சிக் கூடத்தில் மீன்களுடன் படம் எடுத்துக்கொண்டனர்.
அந்த மகிழ் உலாவுக்கு வெளிநாட்டு ஊழியர்கள், வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள், உடற்குறையுள்ளோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் ஆதரவு அளிக்கும் 'எச்ஐஏ' என்ற அமைப்பு ஏற்பாடு செய்தது. இந்த ஆண்டு ஜனவரி 23 முதல் வாராவாரம் இந்த மகிழ் உலா இடம்பெறுகிறது.
இதில் மொத்தம் 1,500 வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், நகர்ப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களின் நல்வாழ்வையும் மனநலனையும் மேம்படுத்த உதவும் இந்தத் திட்டம் மார்ச் மாத இறுதிவரை இடம்பெறும்.
பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தாமல் ஒரு பயண நிறுவனத்திற்கு அன்பளிப்பாக அளித்த 'சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ்' பற்றுச்சீட்டுகளைக் கொண்டு அந்த மகிழ்உலாவுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.