சிறார்களை நன்றி பாராட்டுவோராக ஆக்குவதன் மூலம் கொவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள மனச்சோர்வை போக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது.
சிறார்களை நன்றியை வெளிப்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபடுத்தினால் அவர்களுடைய மீள்திறன், நல்வாழ்வு, மற்றவர்களுடன் அவர்கள் கொண்டிருக்கக்கூடிய உறவு ஆகியவை மேம்படுகின்றன என்பது தேசிய கல்விக் கழகத்தை சேர்ந்த ஆய்வுகள் மூலம் வெளிப்பட்டு உள்ளது.
அதேவேளையில், நன்றியை வெளிப்படுத்தக்கூடிய செயல்களைச் செய்வதன் மூலம் பதின்ம வயதினிரிடையே மனச்சோர்வு அறிகுறிகள் குறைகின்றன. மனஉளைச்சலும் குறைகின்றன என்பதும் அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் கடந்த ஒன்பது ஆண்டு காலத்தில் மூன்று ஆய்வுகள் நடத்தப்பட்டன. அக்கம்பக்க பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த 13 முதல் 16 வயது வரையுள்ள 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆய்வுகளில் உள்ளடக்கப்பட்டனர்.
வார அடிப்படையில் ஆறு முதல் எட்டு வார காலத்திற்கு நன்றியை வெளிப்படுத்தக்கூடிய பல்வேறு செயல்களில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பிறகு பல கேள்விகளுக்குப் பதிலளிக்கும்படி சிறார்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
முதல் ஆய்வு 2013 முதல் 2016 வரை நடந்தது. மாணவர்களிடம் மனநிறைவு மேம்பட்டு இருந்தது.
மனச்சோர்வு அறிகுறிகள் குறைந்து இருந்தன. பொதுவாக அவர்களின் நல்வாழ்வு மேம்பட்டு இருந்தது அந்த ஆய்வில் தெரியவந்தது. சகமாணவர்களுடன் கூடிய உறவும் மேம்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இரண்டாவது ஆய்வு 2015 முதல் 2018 வரை நடத்தப்பட்டது. மனச்சோர்வு அறிகுறிகள் அதிகரிப்பதை தடுப்பதில் நன்றி பாராட்டும் செயல்கள் ஆற்றல்மிக்கவையாக இருந்தன என்பது தெரியவந்தது.
மூன்றாவது ஆய்வு 2017 முதல் 2021 வரை நடந்தது. பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்கும்படி மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். மாணவரிடையே மனஉளைச்சல் குறைந்ததும் பள்ளிக் கூட மீள்திறன் அதிகமாகியதும் இந்த ஆய்வு மூலம் தெரியவந்தது.
இதனிடையே, இது பற்றி கருத்து கூறிய தேசிய கல்விக் கழகத்தின் மூத்த ஆய்வு அறிவியல் அறிஞர் டாக்டர் இமல்டா கேலியன், ஆய்வு முடிவுகள் பொதுவாக முரணற்றவையாக இருக்கின்றன என்பதால் அவை முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன என்றார்.
இவர் கடந்த ஒன்பது ஆண்டு காலமாக இளையர்களிடையே நன்றி உணர்வு பற்றி ஆராய்ந்து வருகிறார்.

