பிள்ளைகள் பிறந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் முறையான வளர்ச்சிக்குத் தேவைப்படக்கூடிய அம்சங்களைக் கண்டுபிடித்து குறித்த காலத்தில் தேவையான உதவிகளைச் செய்வதற்காக ஒரு புதிய செயல்திட்டம் ஜனவரி 26ஆம் தேதி தொடங்கப்பட்டது.
அந்தத் திட்டம் முற்றிலும் நடப்புக்கு வரும்போது ஒவ்வோர் ஆண்டும் இரண்டு மாதம் முதல் நான்கு வரை வயதுள்ள ஏறத்தாழ 1,800 பிள்ளைகள் அதில் உள்ளடக்கப்படுவர்.
'என்னால் முடியும் இலக்கு' (MIP2) என்று குறிப்பிடப்படும் அந்தச் செயல்திட்டம் பொங்கோல், செங்காங்கில் மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனம் நடத்தும் 16 பாலர்பள்ளிகளில் அடுத்த நான்கு ஆண்டுகளில் நடப்புக்கு வரும்.
இந்த அறநிறுவனமும் கேகே மாதர், சிறார் மருத்துவமனை, 'லியன் ஃபவுண்டேஷன்' ஆகிய அமைப்புகளும் தொடங்கி இருக்கும் அந்த முன்னோடித் திட்டம் $12.1 மில்லியன் செலவில் இடம்பெறுகிறது.
உடற்பயிற்சி சிகிச்சை வல்லுநர்கள், சமூக ஊழியர்கள், தாதியர்கள் போன்ற வெவ்வேறு வகைப்பட்ட நிபுணர்களை எல்லாம் ஒன்று திரட்டி பிள்ளைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் உதவுவது புதிய செயல்திட்டத்தின் இலக்கு என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, புதிய செயல்திட்டம் பற்றி கருத்துரைத்த லியன் ஃபவுண்டேஷன் நிறுவனத்தின் செயல்திட்ட இயக்குநர் இங் ஸி யோங், இந்தப் புதிய செயல்திட்டம் காரணமாக செலவு குறையும் என்று தெரிவித்தார்.
மிக முக்கியமாக, பிள்ளைகளுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அது முன்னதாகவே கண்டறியப்பட்டு அவற்றைச் சரிப்படுத்த முன்கூட்டியே முயற்சிகள் இடம்பெறும் என்பதால் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் ஏற்படக்கூடிய மனக்கவலைகள் பெரிதும் குறையும். சமூக இழப்புகளும் குறைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தச் செயல்திட்டம் பாலர்பள்ளிகளை உள்ளடக்குவது மட்டுமின்றி குடும்பம், சிறார் நடவடிக்கைகள் போன்ற துறைகளில் பெற்றோருக்கு வழிகாட்டி உதவவும் நோக்கம் கொண்டுள்ளது.

