இந்திய உணவுவகையான தோசை, மெக்சிகோ நாட்டு உணவான டாக்கோ, இவ்விரண்டின் சங்கமம்தான் 'தோசை டாக்கோ'. இதை உலகுக்கு முதல்முறையாக 'மஹா கோ' உணவகம் அறிமுகப்படுத்தி உள்ளது. ரஜித் அஹமது, 26, சிங்கப்பூரின் 'ராப்' இசைப் பாடகரான யங் ராஜா என அழைக்கப்படுபவர்.
இவர் தம்முடைய நீண்டகால நண்பர் திரு ஆங் வெய்க்குவானுடன் ஆண்டு தொடக்கத்தில் 'மஹா கோ' உணவகத்தைத் துவங்கினார். மெக்சிகோ, இந்திய உணவுவகை
களைக் கலந்து வழங்கும் உணவகம், ஃபியூஷனோபொலிஸ் லிங்க் பகுதியில் உள்ளது. தம் அம்மா தோசை தயாரிக்கும் அதே செய்முறையை யங் ராஜா கையாண்டு அதில் இனிப்பும் காரமான மசாலா வகைகளையும் கலந்து உலகின் முதல் தோசை டாக்கோவை உருவாக்கியுள்ளார்.
கிருமித்தொற்றுச் சூழலுக்கிடையே எட்டு மாதங்களாக கடுமையாக உழைத்து உணவகத்தை யங் ராஜாவும் அவரின் நண்பரும் தொடங்கி வைத்தனர். நன்கு திட்டமிட்டு உணவக வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கு அதே கொவிட்-19 சூழல், நிறைய நேரத்தை கொடுத்ததாகவும் இவர்கள் கூறுகிறார்கள்.
தோசையை எப்படியெல்லாம் புதுவிதமாகத் தயாரித்து உண்ணலாம் என்று யோசித்ததுடன் பல்வேறு முறைகளைக் கையாண்டு சமைத்தும் பார்த்ததாக அவ்விருவரும் பகிர்ந்துகொண்டனர். அப்படி ஒரு நாள் 'பீனட் பட்டர் நட்டெல்லா'வைத் தோசையில் தடவி உண்டபோது அந்த ருசி அவர்களை மெய்மறக்க வைத்தது. அந்தச் சுவையே உலகின் முதல் தோசை டாக்கோ உருவாகக் காரணமானது.
"இந்த உணவகம், நான் சிறு வயதிலிருந்தே கண்ட ஒரு கனவு. புதுமையும் வண்ணமயமாகவும் உள்ள எங்கள் உணவகத்திற்கு வருவோர், புத்துணர்ச்சி பெறுவர் என்று நம்புகிறோம்," என்று கூறினார் யங் ராஜா.
"ஒரு கலைஞனாக புதுமையானவற்றை மக்களுக்குப் பிடித்த முறையில் வழங்குவதே எனது நோக்கம். மக்கள் தங்களின் பொழுதை இங்கு இன்பமாகக் கழிக்க வேண்டும் என்பதே என் ஆசை," என்றார்.
குவேகமோலி தோசையுடன் சல்சா, மொறுமொறு கோழித் தோசை டாக்கோவுடன் வெள்ளரிக்காய்த் தயிர் போன்ற தோசை டாக்கோ வகைகளை இங்கு வருவோர் ருசித்துப் பார்க்கலாம்.
"வாழ்க்கையில் அடைய விரும்புவதை, துணிந்து செய்து வெற்றி பெறு என்ற தாரக மந்திரத்தை எப்போதுமே என் குடும்பத்தார் என்னிடம் கூறுவர். உணவுவகைகளை மக்களிடம் விற்கும் முன், குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அவற்றை முதலில் ருசித்துப் பார்த்து மேம்படுத்தும் வழிகளைக் கூறுவார்கள்," என்றார் யங் ராஜா.
யங் ராஜாவின் இசையில் மட்டுமல்லாமல் அவரின் உணவகத்திலும் புதுமை உள்ளது என்பதை உணவகத்திற்கு வருகையளிக்கும் வாடிக்கையாளர்கள் உணர்வர்.

