சிங்கப்பூரர்களிடையே 'ஹாட்போட்' முறையில் தயாரிக்கப்படும் உணவு மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்த சீன உணவுத் தயாரிப்பு முறையை இந்திய சமூகத்திற்கு ஏற்றவாறு 'புடாக்கா' உணவகம் வழங்குகிறது.
கேலாங்கில் அமைந்துள்ள இந்த உணவகம், உலகிலேயே முதல் இந்திய 'ஹாட்போட்' உணவு வகைகளைத் தயாரிக்கும் உணவகம் என்று கூறப்படுகிறது. இது கடந்த ஜூலையில் திறக்கப்பட்டது.
மேசை மீதுள்ள ஒரு சிறு அடுப்பில் சட்டி ஒன்று வைக்கப்படும். அந்தச் சட்டியில் சூப் வகை ஒன்று ஊற்றப்படும். கொதித்துக்கொண்டிருக்கும் சூப்பில் இறைச்சி, காய்கறி, காளான் வகைகளைப் போட்டு வாடிக்கையாளர்கள் சமைத்துச் சாப்பிடலாம். சூடான 'கிரில்' அடுப்பில் இறைச்சித் துண்டுகளை வாட்டியும் உண்ணலாம்.
ஆறு விதமான சூப் வகைகளிலிருந்து வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கலாம். பின்னர் அவரவருக்குப் பிடித்தமான, இந்திய மசாலா கலந்த இறைச்சியையும் காய்கறிகளையும் கொதிக்கும் சூப்பில் அல்லது கிரில் அடுப்பில் சமைத்து உண்ண முடியும்.
'சீன ஹாட்போட்', 'கொரிய ஹாட்போட்', 'மூக்காட்டா' என்று அழைக்கப்படும் 'தாய் ஹாட்போட்' என்ற வரிசையில் உலகின் முதல் இந்திய ஹாட்போட் உணவகம் 'புடாக்கா' என்று இதைத் தொடங்கிய 46 வயது திரு வி. ராமு நம்புகிறார். 'டிஜே'யாக தொடங்கி, 2006ஆம் ஆண்டில் 'த கேவர்ன் குழுமத்தை' அவர் தோற்றுவித்தார்.
புதுமையான உணவு வகைகளைத் தயாரிப்பதைத் தங்கள் இலக்காகக் கொண்டுள்ளதாக ராமு குறிப்பிட்டார்.
"அடுத்து என்ன புதிதாக செய்யலாம் என்பதே எங்கள் சிந்தனையாக இருக்கும். 2018ல் 'கேவர்ன்' உணவகத்தில் 'சட்டி சோறு' உணவை அறிமுகம் செய்தோம். அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்குப்பின் வேறு என்ன புதிதாகச் செய்யலாம் என்று நினைத்தோம். அதில் தோன்றியதுதான் இந்த இந்திய ஹாட்போட்," என்று கூறினார் திரு ராம்.
இந்திய ஹாட்போட் உணவகத்தைத் திட்டமிடுவதற்கு கொவிட் சூழல் ஏதுவாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும் என்றார்.
ஆறு மாதங்களுக்கு ஆராய்ச்சிகளில் ஆழமாக இறங்கி, தங்கள் சமையல் கலைஞர்களைக் கொண்டு புதுமையான உணவு வகைகளை சோதித்துப் பார்த்தார்கள். அதில் உருவானவைதான் நண்டு ரசம், சார்டின் லக்சா போன்ற ஆறு வகை சூப்புகள்.
"உணவை ஹாட்போட்டில் சரியான வெப்பநிலையில் சமைப்பதே பெரும் சவால். சில இந்திய உணவு வகைகளைக் கொதிநிலைக்கு மேல் சமைத்தால் அதன் ருசி மாறிவிடும். அதையும் கருத்தில்கொண்டு உணவு வகைகளைத் தயாரித்திருக்கிறோம்," என்று கூறினார்.
"இந்திய ஹாட்போட் உணவை இந்தியர்கள் மட்டுமின்றி அனைத்து இனத்தவரும் திரண்டு வந்து ரசித்து, ருசிக்க வேண்டும்," என்பதே தம் ஆசை என்றார் ராமு.

