தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் உதவி தலைமைச் செயலாளரான டெஸ்மண்ட் சூ, பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநர் சபையில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளதாக வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இது உட்பட தனது நிர்வாகக் குழுவில் செய்யப்படும் மாற்றங்கள் இன்று முதல் நடப்புக்கு வரும் என்று கழகம் கூறியது. திரு சூ, தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும் ஆவார்.
தேசிய தொழிற்சங்க காங்கிரசில் கண்கவர் இடங்கள், சுற்றுலா தலங்கள், கேளிக்கை சங்கம், சிங்கப்பூர் ஒளிப்பதிவு சங்கம், பாதுகாப்பு ஊழியர்கள் சங்கம் ஆகியவற்றின் ஆலோசகராகத் திரு டெஸ்மண்ட் விளங்குகிறார்.
இவர், சிங்கப்பூரின் ஷெல் நிறுவன ஊழியர் சங்கத்தின் அறங்காவலராகவும் பொறுப்பு வகிக்கிறார். மேலும், சர்பானா ஜூரோங், எஸ்பிஎஸ் டிரான்சிட் ஆகிய நிறுவனங்களின் இயக்குநர் சபைகளிலும் திரு சூ இடம்பெற்றுள்ளதாகப் பொருளியல் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட செய்தி அறிக்கை குறிப்பிட்டது. பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் இரண்டு இயக்குநர்கள் தங்கள் பதவியிலிருந்து நேற்று விலகிக்கொண்டனர். ஐவர் தொடர்ந்து அங்கம் வகிக்கின்றனர்.

