'பிஎம்ஐ' எனும் உடல் எடை குறியீடு போன்ற அம்சங்கள் மாணவர்களின் மனநலனைப் பாதிக்கக்கூடும் என்று மருத்துவ, சுகாதார வல்லுநர்கள் சிலர் கூறுகின்றனர். இத்தகைய அம்சங்கள பொதுவாக தொடக்கப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சிப் புத்தகத்தில் குறிப்பிடப்படும். இது, தன்னம்பிக்கையில் உடல் எடைக்கு முக்கியப் பங்குண்டு என்ற கருத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தக்கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
மிகவும் பருமனாக இருப்பது, அளவுக்கு அதிகமாக ஒல்லியாக இருப்பது உள்ளிட்ட பிரிவுகளாக உடல் எடைக் குறியீட்டைக் கொண்டு தேர்ச்சிப் புத்தகங்களில் மாணவர்கள் வகைப்படுத்தப்படுவது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸுக்குத் தெரியவந்தது. இந்த அணுகுமுறையை சில தொடக்கப் பள்ளிகள் பின்பற்றுகின்றன.
சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் உடல் எடை வழிகாட்டிகளுக்கு ஏற்றவாறு மாணவர்களின் உடல் ரீதியான வளர்ச்சியைக் கண்காணிக்க ஆண்டுதோறும் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் இரு முறை அவர்களின் உயரமும் உடல் எடையும் கணக்கிடப்படுகின்றன என்று கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதன் மூலம் ஆரோக்கியமாக இல்லாத மாணவர்களுக்கு நல்ல உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுவது, அடிக்கடி உடல் ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்றவற்றில் ஆதரவு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
"மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பற்றி அவர்களுக்கும் பெற்றோருக்கும் தெரியப்படுத்த உடல் எடை குறியீட்டு அம்சங்களைப் பள்ளிகள் குறிப்பிடலாம். மாணவர் நலனை மேம்படுத்தக் குடும்பங்களுக்கும் பள்ளிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வை வளர்க்கும் முயற்சியில் இந்நடவடிக்கை அடங்கும்," என்று அவர் சுட்டினார்.
எனினும், உடல் எடை குறியீடு போன்ற அம்சங்கள் மாணவர்களின் மனநலனில் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று மனநல மருத்துவர்கள் சிலர் கூறுகின்றனர். மேலும், இதனால் மாணவர்களின் தன்னம்பிக்கை குறைலாம், உணவுப் பழக்கங்கள் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் வேறு சில வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
பள்ளிகளில் மாணவர்களின் உடல் எடை குறியீட்டைக் கண்காணிப்பதற்கான காரணம் தங்களுக்குப் புரிவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்ட 15க்கும் அதிகமான பெற்றோர் தெரிவித்தனர். எனினும், இத்தகைய விவரங்கள், இவற்றைக் கொண்டு தேர்ச்சிப் புத்தகத்தில் மாணவர்களை வெவ்வேறு பிரிவுகளில் வகைப்படுத்துவது ஆகியவற்றின் அவசியம் குறித்தும் பெற்றோர் கேள்வி எழுப்பினர்.

