அப்பர் புக்கிட் தீமாவில் உள்ள கால்வாயில் மாண்டு கிடந்த 11 வயது இரட்டையரின் தந்தை மன
நலப் பரிசோதனைக்காக சாங்கி சிறை வளாகத்தில் உள்ள மருத்துவ நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஈதன் யாப் இ செர்னைக் கொலை செய்ததாக 48 வயது சிங்கப்பூரரான ஸேவியர் யாப் ஜுங் ஹோன் மீது கடந்த வாரம் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த மாதம் 21ஆம் தேதியன்று மாலை 4.23 மணிக்கும் 6.25 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கிரீன்ரிட்ஜ் கிரசெண்ட்டில் உள்ள சிறுவர் விளையாட்டு மைதானத்துக்கு அருகில் உள்ள கால்வாயில் தமது மகனை யாப் கொன்றதாக நம்பப்படுகிறது. ஈதனைப் போலவே அவரது இரட்டைச் சகோதரரான ஏஷ்டன் யாப்பும் கால்வாயில் பேச்சுமூச்சின்றி காணப்பட்டார். இருவரும் மாண்டுவிட்டதாக சம்பவ இடத்தில் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு இம்மாதம் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

