பாலியல் ரீதியாக ஒருவருடன் உரையாடுவது, ஆபாசப் படங்களைப் பார்ப்பது என இணையப் பயன்பாட்டின்போது இளம் பிள்ளைகள் தகாத சூழல்களில் சிக்கும் சாத்தியம் உண்டு.
இச்சூழல்களில் சிக்காமல் தங்களின் பிள்ளைகளைப் பெற்றோர்கள் பாதுகாக்க முயற்சி செய்யும் அதேவேளையில், இதுபோன்ற சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பிள்ளைகளைத் தயார்படுத்த வேண்டும் என்று மனநலக் கழகத்தின் தலைமை நிர்வாகி இணைப் பேராசிரியர் டேனியல் ஃபுங் கூறுகிறார்.
மின்னிலக்கச் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், இத்தகைய தகாத பாலியல் சூழல்களில் சிக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
'மேலும் பாதுகாப்பான இணைய தினம்' என்ற நாளை முன்னிட்டு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்ட இணையக் கருத்தரங்கில் அவர் இவ்வாறு பேசினார்.
இணையத்தில் பாலியல் ரீதியான சூழல்களைக் கட்டுப்படுத்துவது முடியாத ஒன்று என்று சுட்டிய பேராசிரியர் ஃபுங், இப்படி ஒன்று உள்ளது என்றும் இதைப் பார்ப்பது நல்லதல்ல என்றும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் புரிய வைக்கவேண்டும் என்றார்.
"உறவுகள் என்றால் என்ன என்பதைப் பற்றி ஆபாசப் படங்கள் வழி ஒருவர் தவறானவற்றைப் புரிந்துகொள்ளலாம். அதுவும் ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையாகும் நிலையும் ஏற்படலாம்," என்று பகிர்ந்துகொண்டார் அவர்.
இணையத்தில் பாலியல் ரீதியான சூழல்களில் சிக்கிய இளம் பிள்ளைகளின் விகிதம் 2010ஆம் ஆண்டில் 10 விழுக்காடாக இருந்தது. இது 2017ல் 30 விழுக்காட்டிற்கு மேல் பதிவாகியிருந்தது என்று 2018ஆம் ஆண்டின் அறிக்கை ஒன்றை அவர் மேற்கோள் காட்டினார்.
தொடர்பு, தகவல் அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் இணையக் கருத்தரங்கில் கலந்துகொண்டு, பாதுகாப்பான இணையப் பயன்பாடு தொடர்பில் சிங்கப்பூரின் சட்டங்கள் சிலவற்றைத் திருத்தும் தேவை எழலாம் என்று குறிப்பிட்டார்.
பெற்றோர்கள், கல்வியாளர்கள் எனக் கருத்தரங்கில் 180க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்தரங்கில் பெற்றோர்கள் எழுப்பிய சில அக்கறைக்குரிய விவகாரங்கள்:
அறிமுகம் இல்லாத ஒருவருடன் இணையத்தில் என் பிள்ளை
நட்புகொள்வதைத் தடுப்பதா...
பேச முடியாது என்பதைவிட, முக்கியமான தகவல்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்வதால் உங்கள் பிள்ளைக்குப் பின்னர் பாதிப்பு உண்டாகுமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஆபாசப் படங்களைப்
பார்ப்பதிலிருந்து என்
பிள்ளையை நான் எவ்வாறு
பாதுகாப்பது...
உங்கள் பிள்ளை இதுபோன்ற படங்களைப் பார்க்கிறார் என்பதை நீங்கள் அறிய வந்தால், அமைதியாக அவருடன் பேசி, இவற்றைப் பார்ப்பதற்கான அவரது காரணத்தைக் கேட்டறியுங்கள்.
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அமையும் ஆபாசப் படங்களைப் பார்ப்பது நல்லதல்ல என்பதை விளக்கவும்.
இணையத்தில் அச்சுறுத்தும்
நபர்களைச் சமாளிக்க, என்
பிள்ளைக்கு நான் எப்படி
உதவுவது...
ஒருவர் தன்னை அச்சுறுத்துகிறார் என்பதைப் பிள்ளைகள் ஒப்புக்கொள்ளத் தயங்கலாம். இவ்வாறு ஒப்புக்கொள்வதைப் பலவீனத்தின் அறிகுறியாகப் பிள்ளைகள் கருதலாம்.
தன்னை அச்சுறுத்தும் அல்லது துன்புறுத்தும் நபரைப் பற்றி புகார் அளிக்கவும் அவர் இனி தன்னைத் தொடர்புகொள்ளாதவாறு தடுக்கவும் முடியும் என்பதைப் பெற்றோர் அறிவுறுத்தலாம்.
மின்னிலக்க உலகில் என் பிள்ளை பாதுகாப்பாக உலாவ, நான் எத்தகைய வழக்கங்களை நடைமுறைப்படுத்துவது...
பிள்ளைகளின் மின்னிலக்கப் பயணத்தில் பெற்றோருக்கும் பங்குண்டு.
தகாதவற்றை இணையத்தில் காணும் நிலை ஏற்படுவதைத் தடுக்க, பல செயலிகள் உள்ளன. அவற்றை முதலில் பயன்படுத்தவும்.
இணையத்தில் பிள்ளைகள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள், அவர்கள் எவ்வளவு நேரம் செலவழிக்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் அணுக்கமாகக் கண்காணிக்க வேண்டும்.

