சிங்கப்பூரில் சிறைத் தண்டனை முடிந்து விடுதலையாகும் முன்னாள் கைதிகள், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது குறைந்துள்ளது.
சிங்கப்பூர் சிறைத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2019ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் கைதிகளில் 20 விழுக்காட்டினர் மட்டுமே அடுத்த இரண்டு ஆண்டுகளில் குற்றச்செயல்களுக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர், சிறைத்தண்டனை பெற்றனர் அல்லது காவல் நிலையத்தில் முன்னிலையாகி தகவல் தெரிவிக்க வேண்டிய நிலையில் இருந்தனர்.
இதற்கு முந்தைய 2018ஆம் ஆண்டில் இதுபோல் குற்றச்செயல்களில் மீண்டும் ஈடுபட்டோர் விகிதம் 22.1 விழுக்காடாக இருந்ததாக சிறைத் துறை தெரிவித்தது.
கடந்த 10 ஆண்டுகளாக விடுதலையான முன்னாள் குற்றவாளிகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் குற்றச்செயல்களில் ஈடுபடும் விகிதம் சராசரியாக 25 விழுக்காடாக இருந்து வந்தது என்றும் புள்ளிவிவரங்கள் சுட்டின.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமையன்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த உள்துறை அமைச்சர் கா சண்முகம், முதல் நிலை பணக்கார நாடுகளில் விடுதலையான இரண்டு ஆண்டுகளுக்குள் முன்னாள் கைதிகள் குற்றச்செயல்களில் ஈடுபடும் விகிதம் 60 அல்லது 65 விழுக்காடுவரை இருந்ததை புள்ளி விவரங்கள் காட்டுவதாகத் தெரிவித்தார்.
இதுபற்றிக் கருத்துரைத்த சிறைத் துறை ஊடக, தகவல் தொடர்புப் பிரிவு இயக்குநரான ரஃபிடா சுபார்மான், சிறைத் துறையின் ஒட்டுமொத்த பராமரிப்பு முறை தான் கைதிகளிடையே குற்றச்செயல்கள் புரிவது குறையக் காரணம் என்று விளக்கினார்.
கைதிகளுக்குப் பயனளிப்பது ஆதாரபூர்வமாக தெரியும் புனரமைப்புத் திட்டங்கள் மூலம் இது சாத்தியமாகியுள்ளதாகக் இவர் கூறினார்.
அத்துடன், விடுதலையாகும் முன்னாள் கைதிகள் சமூகத்துடன் மீண்டும் ஒன்றிணையும்போது அவர்களுக்கு உதவுவதும் குற்றச்செயல்கள் குறைந்து வருவதற்கு காரணம் என்று உதவி ஆணையர் திருவாட்டி ரஃபிடா தெரிவித்தார்.
விடுதலையாகும் கைதிகளைப் பொறுத்தவரை இதுவே முக்கியமான அம்சம் என்றார் அவர்.
மேலும், சமூக திருத்தத் திட்டங்களும் முன்னாள் கைதிகளுக்கு உதவி வருவதாக திருவாட்டி ரஃபிடா கூறினார்.
முன்னாள் கைதிகள் விடுதலையான பின்னர் அவர்களுக்கான கட்டாயப் பராமரிப்புத் திட்டங்கள், சமூக சேவை தண்டனைகள் போன்ற திட்டங்களில் சென்ற ஆண்டு 3,402 பேர் ஈடுபடுத்தப்பட்டதாக இவர் கூறினார்.
இதற்கு தகுதிபெறும் குற்றவாளிகள் தங்கள் தண்டனையின் கடைசிக் கட்டத்தை சமூகம் சார்ந்த திட்டங்களில் சில நிபந்தனைகளுடன் கழிக்க அனுமதிக்கப்படுகின்ற னர். உடலில் மின் பட்டை அணிவது, திட்ட ஒன்றிணைப்பு அதிகாரியுடன் தொடர்பில் இருப்பது போன்ற நிபந்தனைகள் இதில் அடங்கும்.
இதுதவிர, முன்னாள் கைதிகளுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தாலும் அவர்கள் சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைய உதவும் என்று Careers@YR at Yellow Ribbon Singapore (YRSG) அமைப்பின் இயக்குநர் கேரன் டான் கூறினார்.

