சிங்கப்பூருக்கான முக்கிய தொழில்துறை துறைகளுக்கும் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடிய விண்வெளித் திறன்களுக்கான ஆய்வு, மேம்பாட்டுக்கு அரசாங்கம் $150 மில்லியன் முதலீடு செய்யும் என்று வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
விண்வெளித் தொழில்நுட்பம், தொழில்துறை அலுவலகம் (OSTIn), தேசிய ஆய்வு அறக்கட்டளை ஆகியவற்றால் தொடங்கப்பட்ட விண்வெளி தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டம் (STDP), சிங்கப்பூரில் உள்ள ஆய்வாளர்களுக்கு நிதியளிக்கும்.
விமானம் மற்றும் கடல்துறை போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கான உள்ளூர் விண்வெளி புத்தாக்கங்களை ஊக்குவிப்பது இந்த முதலீட்டின் நோக்கம். மேலும் பொட்டல விநியோகத்தைக் கண்காணிக்கப் பயன்படும் ஜிபிஎஸ் போன்ற அன்றாடப் பயன்பாட்டுக்கான தொழில்நுட்பங்களையும் இது ஊக்குவிக்கிறது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப சூழலில் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப மையமாக சிங்கப்பூர் தனது நிலையைத் தக்க வைத்துக்கொள்ள உதவும்.
மூலதனம், திறமை, அறிவுசார் சொத்துக்கான மையமாகவும் சிங்கப்பூர் உருவாக உதவும் என்று திரு கான் கூறினார்.
ஷெரட்டன் டவர்சில் நேற்று நடைபெற்ற 14வது உலக விண்வெளி தொழில்நுட்ப மாநாட்டில் பேசிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இணையம் வழி அனைத்துலகப் பேராளர்களும் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
இந்த நிதியைப் பெறத் தகுதியான திட்டங்கள் முதல் கட்ட மதிப்பீட்டில் உள்ளன. இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் மானிய விண்ணப்பத்துக்கு அழைப்பு விடுக்கப்படும்.
சிங்கப்பூர் தனது விண்வெளி உத்தியின் ஒரு பகுதியாக அனைத்துலகப் பங்காளிகளை உருவாக்குவதிலும், உள்ளூர் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனங்களை தொடர்ந்து வளர்ப்பதிலும் கவனம் செலுத்தும் என்று திரு கான் கூறினார்.
கடந்த 2013இல் அமைக்கப்பட்ட தேசிய விண்வெளி அலுவலகமான OSTIn, அனைத்துலக அளவில் போட்டித் திறன்களை வளர்ப்பதில் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு ஆதரவளித்து வருகிறது.