சிங்கப்பூரின் எல்லைச் சாவடிகளில் செயல்படும் அரசாங்க அமைப்பில் வேலை பார்த்த ஆடவர், இரண்டு வெவ்வேறு சம்பவங்களில், பணி யிடத்தில் ஒரு பெண்ணை மான பங்கப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்த 36 வயது ஆடவர் மீது துன்புறுத்தல் குற்றச்சாட்டு ஒன்றும், மானபங்கக் குற்றச்சாட்டுகள் இரண்டும் சுமத்தப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தைக் காக்கும் பொருட்டு ஆடவரின் பெயர் வெளி யிடப்படவில்லை.
சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப் பின் பெயரும் நீதிமன்ற ஆவணங் களில் தணிக்கை செய்யப்பட்டு உள்ளது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு நேற்று அளித்த தகவலில் ஆடவர் சென்ற ஆண்டு பிப்ரவரி முதல் தேதியே வேலையிலிருந்து விலகிவிட்டதாக அந்த அரசாங்க அமைப்பு தெரிவித்தது.
அமைப்பின் ஊழியர்கள் வேலை யிடத் துன்புறுத்தல், முறையற்ற நடத்தை ஆகியவற்றில் ஈடுபடுவதை அறவே பொறுத்துக்கொள்ள இயலாது என்றும் அவற்றைக் கடுமையாகக் கருதுவதாகவும் அந்த அமைப்பின் பேச்சாளர் ஒருவர் கூறினார். அமைப்பிற்குள் முறையான தொழில்முறைச் செயல்பாடுகளும் ஒழுங்குமுறையும் இருப்பதை உறுதிசெய்யக் கடப்பாடு கொண்டு இருப்பதாகவும் அவர் சொன்னார்.
தவறான நடத்தையில் தொடர்புடைய எந்தவொரு அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என்று பேச்சாளர் சொன்னார்.

