பழம்பெரும் செய்தியாளர் ஏ பி ராமன் காலமானார்

பழம்பெரும் செய்தியாளர் ஏ பி ராமன் காலமானார்

1 mins read
d71d94f3-1e13-4693-a653-5da60a09648c
காலஞ்சென்ற திரு ஏ பி ராமன் (படம்: ஃபேஸ்புக்) -

பழம்பெரும் செய்தியாளரும் இலக்கிய ஆர்வலருமான ஏ பி ராமன் தமது 89 வயதில் காலமானார்.

அல்சீமர்ஸ் நோய்க்கான சிகிச்சையை டான் டோக் செங் மருத்துவமனையில் பெற்று கடந்த மாதம் 28 ஆம் தேதி வீடு திரும்பிய திரு ராமன், புதன்கிழமை இரவு 9 மணிக்கு பீஷான் வட்டாரத்திலுள்ள தமது வீட்டில் உயிர் நீத்ததாக அவரது மகன் ஏ பி ஆர் ஸ்ரீதர்,57, தமிழ் முரசிடம் நேற்றிரவு தெரிவித்தார்.

1932ல் தமிழகத்தின் கும்பகோணம் மாவட்டத்தில் பிறந்த திரு ராமன், தமது படிப்பை முடித்த பிறகு 1952ல் மலேசியாவுக்குக் குடிபெயர்ந்து அங்குள்ள காவல்துறையில் எழுத்தர் வேலையில் சேர்ந்தார். மலேசியாவில் தமிழ் எழுத்துப்பணிகளில் மும்முரமாக ஈடுபட்ட அவர், அங்குள்ள பல்வேறு பத்திரிகைகளில் கட்டுரைகளையும் கதைகளையும் எழுதியுள்ளார். 'கலைமலர்' என்ற திரைத்துறை பத்திரிகையையும் அங்கு ஆரம்பித்தார்.

பின்னர் 1960களில் சிங்கப்பூருக்கு வந்த திரு ராமன், அப்போதைய ஆர்டிஎஸ் ஒலிபரப்புச் சேவையில் செய்தித் தொகுப்பாளராகப் பணியாற்றினார். தமிழக திரையுலகத்தினரையும் சிங்கப்பூர் வரவழைத்துப் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகராகவும் இருந்த திரு ராமன், தமது வாழ்நாளின் கடைசி 15 ஆண்டுகளாக தமிழ்த் துறைக்கு முழுமையாக ஈடுபட்டதாக திரு ஸ்ரீதர் தெரிவித்தார்.

84 வயது மனைவி காமாட்சியுடன் ஐந்து பிள்ளைகள் 11 பேரப்பிள்ளைகள் இரண்டு கொள்ளுப்பேரப்பிள்ளைகள் ஆகியோரை விட்டுப் பிரிந்துள்ளார் திரு ராமன்.