சிங்கப்பூரில் பேருந்து, ரயில் சேவைகள் தொடர்பில் பயணிகளிடம் நிலவும் அதிருப்தி 2020ஆம் ஆண்டைவிட சென்ற ஆண்டில் கூடி இருக்கிறது.
பொதுப் போக்குவரத்து சேவை கள் மகிழ்ச்சிகரமானவையாக இருக்கின்றன என்று தெரிவித்தவர்களின் விகிதம் இரண்டாவது ஆண்டாக சென்ற ஆண்டில் குறைந்துவிட்டது.
பயணிகளின் தேவைகளைச் சிறந்த முறையில் புரிந்துகொள்ளவும் மேம்படுவதற்கான தேவை உள்ள துறைகளை அடையாளம் காணவும் பொதுப் போக்குவரத்து மன்றம் ஆண்டுதோறும் பொதுப் போக்குவரத்து பயணிகள் மனநிறைவு ஆய்வை நடத்துகிறது. அதில் இந்த நிலவரங்கள் தெரியவந்துள்ளன.
மன்றம், 15 வயது, அதற்கு அதிக வயதும் உள்ள 4,212 பயணிகளை உள்ளடக்கி இணையம் வழி சென்ற ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதிவரை ஆய்வு நடத்தியது.
கொவிட்-19 தொற்று காரணமாக நேரடியாக அல்லாமல் இணையம் வழி ஆய்வு நடத்தப்பட்டது.
சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்து மனநிறைவளிக்கிறது என்று தெரிவித்தவர்களின் அளவு 92% ஆக இருந்தது. இது 2020ல் 97.6% ஆகவும் 2019ல் 99.4% ஆகவும் இருந்தது.
இதற்கு முன்னதாக 2015ல்தான் பயணிகள் மனநிறைவு அளவு ஆகக்குறைவாக, அதாவது 91.8% ஆக இருந்தது. அதற்குப் பிறகு சென்ற ஆண்டில்தான் அது மிகவும் குறைந்துள்ளது.
பேருந்து, ரயில் இரண்டையும் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டில் பயணிகளின் மனநிறைவைப் பொறுத்தவரை, ரயில் சேவைகள் சிறப்பாக இருந்தன. காத்திருக்கும் நேரம்தான் பெரும் பிரச்சினை என்பது தெரியவந்தது.
இதைப் பொறுத்தவரை பயணிகளில் 80.9% மட்டுமே மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்தச் சங்கடம் பேருந்து பயணிகளிடையே அதிக மாக இருந்தது. பேருந்து சேவைகள் மனநிறைவாக உள்ளதாகக் கூறியவர்கள் வெறும் 75.7%தான்.
பொதுப் போக்குவரத்தின் நம்பகத்தன்மை, வசதி, பயண நேரம், வாடிக்கையாளர் சேவை, பாதுகாப்பு ஆகியவை தொடர்பில் மனநிறைவு தெரிவித்த பயணிகள், 2020 ஆம் ஆண்டைவிட சென்ற ஆண்டில் குறைவாக இருந்தனர்.
என்றாலும் கூட, வழங்கப்பட்ட சேவைத் தகவல்கள், பேருந்து முனையங்களுக்குச் செல்லும் வசதிகள், பேருந்து நிறுத்தங்கள், எம்ஆர்டி ரயில் நிலையங்கள் ஆகியவற்றைப் பார்க்கையில் மனநிறைவு தெரிவித்தவர்கள் சென்ற ஆண்டில் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலான பிரிவுகளில் சராசரி மனநிறைவு அளவு ஒப்பிட்டுப் பார்க்கையில் சென்ற ஆண்டில் தொடர்ந்து சீராகவே இருந்து வந்தது.
அதாவது மனநிறைவுடன் கூடிய பயணிகள் பொதுப் போக்குவரத்தை மிக உயர்வானதாக கருதுகிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது.
இந்தச் சராசரி மனநிறைவு அளவு 2020, 2019 ஆகிய ஆண்டுகளைப் போலவே சென்ற ஆண்டிலும் 7.8 ஆக இருந்தது.
இதனிடையே, இது பற்றி ஃபேஸ்புக்கில் கருத்து கூறிய போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், தொற்று காரணமாக பல சவால்களும் இடர்களும் இருந்தபோதிலும் பொதுப் போக்குவரத்து ஊழியர்கள் தங்களுடைய சிறப்பான பணியைத் தொடர்ந்து இடைவிடாமல் செவ்வனே நிறைவேற்றி வருகிறார்கள் என்பதையே இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுவதாக நேற்று தெரிவித்தார்.

