வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகளுக்குத் தேவை அதிகமாகவே இருந்துவருகிறது. தொடர்ந்து 19வது மாதமாக கடந்த ஜனவரியிலும் அந்த விலை கூடியது.
அந்தச் சந்தையை மட்டுப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகள் நடப்புக்கு வந்து ஒரு மாத காலம் ஓடிவிட்ட நிலையிலும் விலை ஏற்றம் கண்டது. டிசம்பரில் 0.8% அதிகரித்த வீவக மறுவிற்பனை வீட்டின் விலை ஜனவரியில் 1.1% அதிகரித்ததாக நிலச்சொத்து இணைய வாயில்கள் மூலம் தெரிகிறது.
மறுவிற்பனை வீட்டு விலை அதிகரிப்பு எங்கும் காணப்படுகிறது. முதிர்ச்சி அடைந்த பேட்டைகளிலும் முதிர்ச்சி அடையாத பேட்டைகளிலும் அனைத்து வகை வீடுகளின் மறுவிற்பனை விலையும் ஏற்றம் கண்டது.
நான்கறை வீட்டின் விலைதான் ஆக அதிகமாகக் (1.8%) கூடியது. இருந்தாலும் கைமாறிய வீடுகளின் எண்ணிக்கை ஜனவரியில் அவ்வளவாக அதிகரிக்கவில்லை.
டிசம்பரில் 2,428 வீடுகள் விற்கப்பட்டன. இந்த எண்ணிக்கை ஜனவரியில் 2,442 ஆக இருந்தது. 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சென்ற மாதம் கைமாறிய வீடுகள் எண்ணிக்கை 2.4% குறைவு என்றாலும் அது 2,432 வீடுகள் என்ற 12 மாத கால சராசரி அளவைவிட அதிகம் என்று தெரிகிறது.
இதனிடையே, வீவக மறுவிற்பனை வீட்டுச் சந்தை தொடர்ந்து மீள்திறனுடன் இருந்து வரும் என்றே பெரும்பாலான பகுப்பாய்வாளர்கள் கூறுகிறார்கள்.

