முதல்முறையாகப் போதைப்பொருள் உட்கொள்பவர்களில் பெரும்பாலானோர் இளையர்கள். அவர்களில் ஐந்தில் மூவர் 30 வயதுக்கும் குறைவானவர்கள்.
முதல்முறை போதைப் புழங்கி
களில் 60 விழுக்காட்டினர் (561 பேர்) 30 வயதுக்கும் குறைவானவர்கள் என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) வெளியிட்ட வருடாந்திர புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
கைது செய்யப்பட்ட அனைத்துப் போதைப் புழங்கிகளில் 33 விழுக்காட்டினர் (912 பேர்) இந்த வயதுப் பிரிவினரைச் சேர்ந்தவர்கள்.
2020ஆம் ஆண்டில் பதிவான எண்ணிக்கையைவிட இவை குறைவு. 2020ஆம் ஆண்டில் முதல்முறை போதைப் புழங்கிகளில் 62 விழுக்காட்டினர் 30 வயதுக்கும் குறைவானவர்கள்.
பிடிபட்ட அனைத்துப் போதைப் புழங்கிகளில் 41 விழுக்காட்டினர் 30 வயதுக்கும் குறைவானவர்கள்.
போதைப் பொருள் உட்கொண்டோர் தொடர்பாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இதற்கு முக்கிய காரணம் என்று சிஎன்பி கூறியது.
கடந்த ஆண்டு மொத்தம் 2,724 போதைப் புழங்கிகள் கைது செய்யப்பட்டதாக அது தெரிவித்தது. 2020ஆம் ஆண்டில் 3,056 பேர் கைது செய்யப்பட்டனர்.
2019ஆம் ஆண்டில் 3,526 பேர் கைதாகினர். கடந்த ஆண்டு பிடிப்பட்ட போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகளில் மூன்றில் ஒருவர் முதல்முறை போதைப் புழங்கிகள்.
2015ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் ஆக அதிகமாக உட்கொள்ளப்படும் போதைப்பொருளாக 'ஐஸ்' இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஐஸ் வகை போதைப்பொருளைவிட கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட அளவு சற்று அதிகம். கடந்த ஆண்டு 48.11 கிலோ ஐஸ் வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு 3,150 புதிய வகை போதைப்பொருள் மாத்
திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
2020ஆம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட அத்தகைய மாத்திரைகளின் எண்ணிக்கையைவிட இது கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகம்.
கடந்த ஆண்டு 13 புதிய வகை போதைப்பொருள் மாத்திரைகளை போதைப்பொருள் பட்டியலின் 'ஏ' பிரிவில் சிஎன்பி சேர்த்தது.
அந்தப் பிரிவில் போதைமிகு அபின், கஞ்சா, ஐஸ் ஆகியவை இடம்பெறுகின்றன.
2020ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டில் கூடுதல் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சென்ற ஆண்டு 105.18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அனைத்துலக, வட்டார நாடுகள் ரீதியில் பல சவால்களை எதிர்கொள்ளும் சூழலிலும் போதைப்பொருள் குற்றங்கள் சகித்துக்கொள்ளப்படாது என்று சிஎன்பி கூறியது.
"அனைத்துலக அளவில், போதைப்பொருள் கொள்கைகளை மேலும் தாராளமயமாக்கச் சொல்லி பல குரல்கள் எழுந்துள்ளன. போதைப்பொருள் விற்பனையால் பலனடைவோர் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர்.
"குறிப்பாக, கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
"இதனால் கஞ்சா ஆபத்தானதல்ல என்ற தவறான புரிதல் பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயம் உள்ளது," என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கூறியது.
கஞ்சா பயன்பாடு சில நாடுகளில் நான்கு மடங்கு அதிகரித்திருப்பதாக ஐநாவின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
கஞ்சாவை உட்கொள்வது ஆபத்தானது என்று நம்பும் இளையர்
களின் எண்ணிக்கை ஏறத்தாழ 40 விழுக்காடு குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கஞ்சாவை சட்டவிரோத போதைப்பொருள் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என தாய்லாந்தின் உணவு, மருந்து ஆணையம் கடந்த மாதம் கோரிக்கை விடுத்திருந்தது.
அவ்வாறு நிகழ்ந்தால் கஞ்சா பயன்பாடு சட்டவிரோதமாகாது.
அதன் விளைவாக அதை சர்வசாதாரணமாகப் பயன்படுத்தலாம்.
தாய்லாந்து, மருத்துவ பயன்பாட்டுக்கும் உணவு மற்றும் அழகு சாதனங்களிலும் கஞ்சாவைப் பயன்படுத்த அனுமதி வழங்கிய முதல் தென்கிழக்காசிய நாடாகும்.
இதற்கிடையே, சிங்கப்பூரில் கொவிட்-19 நெருக்கடிநிலை தொடங்கியதிலிருந்து போதைப்பொருள் உட்கொள்ளும் பதின்ம வயதினரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளாக போதைப்பொருள் உட்கொள்ளும் பதின்மவயதினரின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததை அடுத்து கடந்த ஆண்டு அது சரிந்தது.
2012ஆம் ஆண்டில் 20 வயதுக்கும் குறைவான 190 போதைப் புழங்கிகள் கைது செய்யப்பட்டனர். அந்த ஆண்டு கைது செய்யப்பட்ட 3,507 போதைப் புழங்கிகளில் இது 5.4 விழுக்காடு.
2019ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை புதிய உச்சமாக 378ஆகப் பதிவானது. அந்த ஆண்டு கைது செய்யப்பட்ட 3,526 போதைப் புழங்களில் 10.7 விழுக்காட்டினர் 20 வயதுக்கும் குறைவானவர்கள்.
2020ஆம் ஆண்டில் பிடிபட்ட 20 வயதுக்கும் குறைவான போதைப் புழங்கிகளின் எண்ணிக்கை 305ஆகக் குறைந்தது.
அந்த ஆண்டு கைது செய்யப்பட்ட 3,056 போதைப் புழங்கிகளில் இது 10 விழுக்காடாகும்.