கி. ஜனார்த்தனன்
பழம்பெரும் செய்தியாளரும் இலக்கிய ஆர்வலருமான 'ஏ பி ராமன்' என சுருக்கமாக அழைக்கப்பட்ட அய்யாவய்யர் பட்டாபிராமன் தமது 89 வயதில் காலமானார்.
அல்சைமர்ஸ் நோய்க்கான சிகிச்சையை டான் டோக் செங் மருத்துவமனையில் பெற்று கடந்த மாதம் 28ஆம் தேதி வீடு திரும்பிய திரு ராமன், புதன்கிழமை இரவு 9 மணிக்கு பீஷான் வட்டாரத்திலுள்ள தமது வீட்டில் உயிர் நீத்ததாக அவரது மகன் ஏ பி ஆர் ஸ்ரீதர், 57, தமிழ் முரசிடம் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
1932ல் தமிழகத்தின் கும்பகோணம் மாவட்டத்தில் பிறந்த திரு ராமன், தமது படிப்பை முடித்த பிறகு 1952ல் மலேசியாவுக்குக் குடி
பெயர்ந்து அங்குள்ள காவல்துறையில் எழுத்தர் வேலையில் சேர்ந்தார்.
மலேசியாவில் தமிழ் எழுத்துப்பணிகளில் மும்முரமாக ஈடுபட்ட அவர், அங்குள்ள பல்வேறு பத்திரிகைகளில் கட்டுரைகளையும் கதைகளையும் எழுதியுள்ளார்.
1953ல் அவர் 'புதுயுகம்' என்ற பத்திரிகையில் துணை ஆசிரியராகவும் பின்னர் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
மலாயா நண்பன் பத்திரிகையில் பணியாற்றிய திரு ராமன், தமிழ் நேசன், தமிழ் முரசு ஆகிய நாளிதழ்களுக்கும் எழுதியுள்ளார்.
சிங்கப்பூரில் 1958ஆம் ஆண்டில் ஆரம்பித்த 'கலைமலர்' என்ற திரைத்துறை பத்திரிகை 1972ஆம் ஆண்டு வரை இயங்கியது.
பின்னர் 1960களில் சிங்கப்பூருக்கு வந்த திரு ராமன், அப்போதைய ஆர்டிஎஸ் ஒலிபரப்புச் சேவையில் செய்தித் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.
சிங்கப்பூர் தொலைக்காட்சியின் தமிழ் செய்திப் பிரிவில் 1972 முதல் 1975 வரை பணியாற்றினார். தமிழக திரையுலகத்தினரையும்
சிங்கப்பூருக்கு வரவழைத்துப் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். குறிப்பாக, நடிகர் எம்ஜிஆர், 1973ல் வெளிவந்த தமது 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படத்திற்கு சிங்கப்பூர் வந்தபோது அவருக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தார் திரு ராமன்.
ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகராகவும் இருந்த திரு ராமன், தமது வாழ்நாளின் கடைசி 15 ஆண்டுகளை தமிழ்மொழிக்காக முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார் என்று திரு ஸ்ரீதர் தெரிவித்தார்.
திரு ராமன் புனைந்த 700க்கு மேற்பட்ட நாடகங்களில் பல, சிங்கப்பூர் மற்றும் தமிழக வானொலி, தொலைக்காட்சி நிலையங்களில் படைக்கப்பட்டுள்ளன.
அவரது மறைவு சிங்கப்பூரின் தமிழ் எழுத்துச் சமூகத்திற்கும் இலக்கிய உலகத்திற்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும் என்று சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு நா. ஆண்டியப்பன், 75, தெரிவித்தார்.
"மிகச் சிறந்த எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திரு ராமன், சிங்கப்பூரில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர்.
"அன்பாகவும் இயல்பாகவும் பழகும் திரு ராமன், பிறர் பேசும்போது அதற்கு மரியாதை தந்து அவர்களது கருத்தை நன்கு உள்வாங்கிக்கொள்வார்." என்று திரு ஆண்டியப்பன் கூறினார்.
1960களில் திரு ராமன் ரேஸ் கோர்ஸ் சாலையில் தொடங்கிய காவேரி உணவகம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இலக்கியவாதிகள் கூடும் இடமாகத் திகழ்ந்தது. "வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் இலக்கியவாதிகள் அங்கு சென்று திரு ராமனைச் சந்திக்காமல் செல்லமாட்டார்கள்," என்றும் திரு ஆண்டியப்பன் குறிப்பிட்டார்.
1955ஆம் ஆண்டிலிருந்து திரு ராமன் தமக்கு நல்ல நண்பர் என்று கூறிய கலாசார விருது பெற்ற நாடக இயக்குநர் திரு எஸ்.
வரதன், 88, தமது கலைப்பணிக்குத் திரு ராமன் பெருமளவு ஊக்கம் அளித்திருந்ததாகவும் தெரிவித்தார்.
"எழுத்து வன்மைமிக்க திரு ராமன் எனது நாடகங்களைப் பற்றிய விமர்சனக் கட்டுரைகளை எழுதி வந்தார். நாங்கள் இருவரும் அரசியல், நாட்டு நடப்பு எனப் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசுவோம். தமிழ் மீதான ஈடுபாட்டை இளையர்களிடையே வளர்க்க சமூக ஊடகங்களில் பதிவுகளை எழுதினார்," என்று திரு வரதன் குறிப்பிட்டார்.
பாரதி மற்றும் பாரதிதாசன் விருது, தமிழவேள் விருது, கலை
மகள் கி.வா.ஜ விருது, க.ப அறவாணன் விருது, ஃபேஸ்புக் ஜாம்பவான் உள்ளிட்ட விருதுகளையும் பரிசுகளையும் குவித்துள்ள திரு ராமன், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும் இருந்தார்.
84 வயது மனைவி காமாட்சியுடன் ஐந்து பிள்ளைகள் 11 பேரப்பிள்ளைகள் இரண்டு கொள்ளுப் பேரப்பிள்ளைகள் ஆகியோரை விட்டுப் பிரிந்துள்ளார் திரு ராமன்.
திரு ராமனின் இறுதிச் சடங்கு நேற்று பிற்பகல் நடைபெற்றது.

