சிங்கப்பூர் இந்தியர் சங்கம் நேற்று மீண்டும் செயல்படத் தொடங்கியது.
நிர்வாகக் குழு உறுப்பினர்
களுக்கு இடையிலான பிரச்சினையைத் தொடர்ந்து, சங்க வளாகம் கடந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 7) அன்று மூடப்பட்டது.
சங்கத்தின் வளாகம் வியாழக்கிழமை அன்று மீண்டும் திறக்கப்படும் என்று கூறிய சுற்றறிக்கையை, சிங்கப்பூர் இந்தியர்
சங்கத் தலைவர் விஷ்ணு பிள்ளை புதன்கிழமை இரவு அனுப்பினார்.
அதில் பொறுமை காத்ததற்காக உறுப்பினர்களுக்கு நன்றிகூறிய அவர், சங்கத்தின் செயல்பாடுகளுக்கு தற்போதைய நிர்வாகக் குழுதான் பொறுப்பு வகிப்பதாகவும் பதில் சொல்லும் இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த சனிக்கிழமை அன்று சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் நடந்தது.
அதில் தற்போதைய நிர்வாகக் குழுவுக்கு பதிலாக, சங்கத்தின் துணைத்தலைவர் தமிழ் மாறன் தலைமையில் இடைக்கால நிர்வாகக் குழுவை அமைக்க உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
அதை அடுத்து, சங்க வளாகத்தை மூட தற்போதைய தலைவர் விஷ்ணு பிள்ளை முடிவு செய்தார்.
இதனால் பாலஸ்டியர் சாலையில் இருக்கும் சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் 800 உறுப்பினர்கள் மூன்று நாள்களாக வளாகத்தில் நுழைய முடியவில்லை.
விளையாட்டுப் பயிற்சிக்காக வளாகத்தைப் பயன்படுத்த வந்த சிலர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
சங்கத்தின் நிர்வாகக் குழுத் தேர்தல் ஏன் நடத்தப்படாமல் இருந்தது பற்றி ஆண்டு பொதுக் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து, முன் அறிவிப்பு இன்றி தேர்தல் நடத்தப்பட்டு புதிய இடைக்கால நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது.
அந்த இடைக்காலக் குழுவின் தேர்வு செல்லுமா என்பது இன்னமும் தெளிவாகவில்லை.
திரு விஷ்ணு தேர்தல் செல்லாது என்று கூறியுள்ளார்.

