குடும்ப பட்டிமன்ற போட்டி
வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மே 1ஆம் தேதி வரை
'சூம்' எனும் இணைய நேர்காணொளி வழி குடும்ப உறுப்பினர்களுக்காக (மாணவர்கள் மற்றும் பணிபுரியும் குடும்ப உறுப்பினர்கள்) தமிழை நேசிக்கவும் தமிழில் பேசவும் பட்டிமன்ற போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழர் தகவல் தொழில்நுட்ப சமுதாயத்தின் (Tamils IT Society), ஏற்பாட்டில் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவுடன் வளர்தழிழ் இயக்கம் நடத்தும் 'தமிழ்மொழி விழாவில்' இப்போட்டிகள் நடைபெறும்.
ஒரு குழுவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு அல்லது மூன்று உறுப்பினர்கள் பண்பாடு, மொழி, சமூக மேம்பாடு, தனிப்பட்ட மேம்பாடு போன்ற தலைப்புகளில் விவாதிப்பார்கள். தொடக்க, உயர்நிலை அல்லது பல்கலைக் கழக மாணவர் ஒருவராவது அக்குழுவில் பங்கெடுக்க வேண்டும். பரிசுகள்:
முதல் பரிசு: $500 பற்றுச்சீ்ட்டும் ஆனந்தகண்ணன் கோடயமும்; 2ஆம் பரிசு: $300 பற்றுச்சீட்டு; 3ஆம் பரிசு: $200 பற்றுச்சீட்டு; 4 முதல் 10வது வரை: ஆறுதல் பரிசுகள் ஒவ்வொன்றும் $50 பற்றுச்சீட்டுகள். மேல் விவரங்களுக்கு: https://tamilsitsociety.sg/family-pattimandram-2022/
தொடர்பு எண்: 89495929 (மாகோ)
காவல்துறை அதிகாரி மீது காரை மோத முயன்ற ஆடவர்
மோசடிக் குற்றம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் நேற்று முன்தினம் கார் ஓட்டிக்கொண்டிருந்தபோது அவரை காவல்துறையினர் நிறுத்திப் பிடிக்க முயன்றனர்.
ஆனால் காரை நிறுத்தாமல் காவல் அதிகாரி ஒருவர் மீது மோதிச் செல்ல ஆடவர் முயன்றதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, அங்கிருந்து அவர் காரில் தப்பிச் சென்றார்.
கார் தம்மீது மோதுவதற்குள் அந்த காவல் அதிகாரி அங்கிருந்து நகர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்குப் பிறகு அந்த சந்தேகப் பேர்வழி அதே நாளில் அங் மோ கியோ அவென்யூ 3ல் கைது செய்யப்பட்டார்.
$35,000க்கு கைக்கடிகாரம் ஒன்று விற்கப்படுகிறது என்ற விளம்பரத்தைப் பார்த்து இம்மாதம் 8ஆம் தேதியன்று செங்காங் ஸ்குவேரில் அதை விற்கும் ஆடவர் ஒருவரை அந்தச் சந்தேக நபர் சந்தித்தார். கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு அதை வாங்கப்போவதில்லை என்று கூறிவிட்டு அதே போன்ற இன்னொரு கைக்கடிகாரத்தை விற்பனையாளரிடம் அவர் கொடுத்துவிட்டார். யாருக்கும் தெரியாமல் அந்த விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை அந்தச் சந்தேக நபர் தம்முடன் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டது. விசாரணையின்போது அந்த 26 வயது ஆடவர் அடையாளம் காணப்பட்டார். அவரைப் பார்த்த அதிகாரிகள் அவரது காரை நிறுத்த முயன்றபோதுதான் அந்த அதிகாரி மீது மோத அந்த ஆடவர் முயன்றார்.

