வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பாக சேவையாற்றும் வகையில் திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் புதிய உன்னத மையம் திறக்கப்படவுள்ளது.
ஆசியாவின் முதலாவதாக $14.1 மில்லியன் செலவில் அந்த அனுபவ நிர்வாகப் புத்தாக்க மையம் அமைகிறது. சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகம், அமெரிக்க மென்பொருள் பெருநிறுவனமான 'எஸ்ஏபி', அது பெரும்பங்கு வைத்துள்ள 'குவால்ட்ரிக்ஸ்' அனுபவ நிர்வாக நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்பில் இப்புதிய மையம் அமைகிறது.
நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தல், அனுபவ நிர்வாகத்தில் முக்கியத் தேர்ச்சிகளை ஊழியர்கள் பெற உதவுதல், உலகச் சந்தையில் சிங்கப்பூர் நிறுவனங்களைக் கைதூக்கிவிடுதல் ஆகிய வழிகளில் 180,000க்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ இம்மையம் இலக்கு கொண்டுள்ளது.
அனுபவ நிர்வாக அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள், தொழிற்சிற்பிகள் (business architects), மின்னிலக்க விநியோகத் தொடர் பயிற்சியாளர்கள் உட்பட 30 புதிய வேலைவாய்ப்புகளையும் இம்மையம் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
அதேவேளையில், புத்தாக்கத்தை ஊக்குவிப்பதில் உள்ளூர், அனைத்துலக நிறுவனங்களை ஈர்க்கவும் இம்மையம் உதவும்.
நம்பிக்கையான வாடிக்கையாளர்களை ஈர்த்து, மேலும் பொருள் வாங்கச் செய்தல், நேர்மறையான கலாசாரத்தை உருவாக்குவதில் ஊழியர்களை ஈடுபடுத்தல் போன்றவற்றுக்கு தொழில் நிறுவனங்களுக்கு உதவக்கூடிய மென்பொருளையும் இதர கருவிகளையும் குவால்ட்ரிக்ஸ் போன்ற நிறுவனங்கள் உருவாக்கும்.
மோசமான வாடிக்கையாளர் அனுபவத்தால் ஆண்டுதோறும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு $14.9 பில்லியன் வருமான இழப்பு ஏற்படக்கூடும் என்றும் குவால்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது.
அதே நிறுவனம் நடத்திய இன்னொரு கருத்தாய்வில், இவ்வாண்டில் 48% சிங்கப்பூரர்கள் வேலை மாற திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. சிறந்த வேலை - வாழ்க்கைச் சமநிலையும் வேலையில் முன்னேறும் வாய்ப்புகளுமே அதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது.
போட்டித்தன்மை மிக்கதாக உருவெடுக்கவும் மின்னிலக்கக் கருவிகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை நன்கு அறிந்துகொள்ள ஏதுவாக சிங்கப்பூரர்களுக்குக் கற்றல் வாய்ப்புகளை வழங்கவும் உதவும் வகையில், உள்ளூர், வட்டாரத் தொழில் நிறுவனங்களுடன் புதிய மையம் இணைந்து செயலாற்றும் என்று பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் மூத்த துணைத் தலைவரும் மின்னிலக்கத் தொழில்துறைத் தலைவருமான ஆங் சின் டா கூறினார்.
இதற்கு முன்னரும் குவால்ட்ரிக்ஸ் நிறுவனம் பல முனைப்பான நடவடிக்கைகளை இங்கு எடுத்துள்ளது. வாடிக்கையாளர் அல்லது பணியாளர் அனுபவ மாற்றத்தை விரைவுபடுத்த உதவும் வகையில் பிரத்தியேக தரவு மையத்தைத் திறக்கவுள்ளதாகக் கடந்த ஆண்டில் அந்நிறுவனம் அறிவித்தது. வரும் 2024ஆம் ஆண்டிற்குள் புதிதாக 1,200 பேரை வேலைக்கு எடுக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.