கொவிட்-19 தொற்று காரணமாக கடந்த ஆண்டு அதிகமானவர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டுள்ளது.
ஏராளமானவர்கள் அவசர மருத்துவ உதவி கேட்டு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஏறக்குறைய 213,615 அழைப்புகள் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நேற்று வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் தெரிவித்தது. 2020ஆம் ஆண்டில் வந்த அழைப்புகளைவிட கடந்த ஆண்டு 11.9 விழுக்காடு கூடியது.
குறிப்பாக செப்டம்பருக்கும் நவம்பருக்கும் இடையே மொத்தம் 63,000 அழைப்புகளை குடிமை தற்காப்புப் படையின் துணை மருத்துவர்கள் கையாண்டுள்ளனர். இது, முந்திய ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிட்டால் 36.5 விழுக்காடு அதிகம்.
'தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளேடு விளக்கம் கேட்டபோது 63,000 அழைப்புகளில் சுமார் 4.6 விழுக்காடு அவசர அழைப்புகள் என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது. ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டு அவசரமற்ற அழைப்புகள் சற்று கூடியுள்ளன.
2020ஆம் ஆண்டில் 8,835 அவசரமற்ற அழைப்புகள் வந்தன. ஆனால் கடந்த ஆண்டு சற்றுக்கூடி 9,050 அழைப்புகள் வந்துள்ளன.
இதற்கு கொவிட்-19 சம்பவங்கள் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. பல சம்பவங்களில் தீவிர காயச்சலோ அல்லது மருத்து வமனைக்குக கொண்டு செல்லக்கூடிய அவசியமோ இல்லை என குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இருப்பினும் கடந்த சில ஆண்டு களாக அவசரமற்ற அல்லது பொய்யான அழைப்புகள் குறைந்துள்ளன. அவசர மருத்துவ சேவைக்கு மட்டும் 996 எண்ணை அழைக்கவும் என்று 2018ல் மேற்கொள்ளப்பட்ட பிரசாரம் ஓரளவு பலனளித்துள்ளதை இது காட்டுகிறது.
"உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்களையும் அவசர மருத்துவ உதவி தேவைப் படுவோரையும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக மட்டும் அவசர மருத்துவ சேவை இருப்பதை உறுதி செய்ய உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லாதவர்கள் 995ஐ அழைப்பதை தவிர்க்க வேண்டும்," என்று குடிமைத் தற்காப்புப் படை வலியுறுத்தியது.
உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகமான கொவிட்-19 நோயாளிகளுக்கு தீவிர சுவாசத் தொற்று அறிகுறிகள் அல்லது மோசமான உடல்நிலையில் இருந்தால் அவர்கள் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர் என்று அந்தப் படையின் பேச்சாளர் ஒருவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அவசர மருத்துவ சேவைக்கு வந்த அழைப்புகளில் வேலையிட விபத்துகள், கீழே விழுதல், தாக்குதல் போன்ற சம்பவங்களின் தொடர்பில் 31,656 அழைப்புகள் வந்தன.
தீச் சம்பவங்கள் பற்றி தீ அணைப்புத் துறைக்கு 1,866 அழைப்புகள் வந்துள்ளன. 2020ல் இந்த எண்ணிக்கை 1,877ஆக இருந்தது. கடந்த ஆண்டு நிகழ்ந்த தீச் சம்பவங்களில் 194 பேர் காயம் அடைந்தனர். கடந்த ஆண்டு 194 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இது, 2020ஆம் ஆண்டின் 184ஐவிட அதிகம். கடந்த ஆண்டு தீச்சம்பவங்களில் மூவர் உயிரிழந்தனர். இதற்கு முந்திய ஆண்டில் ஒருவர் மட்டுமே தீ விபத்தில் மாண்டார்.
பெரும்பாலான தீச் சம்பவங்களுக்கு மின்கசிவு அல்லது மின் சாதனங்கள் காரணமாக இருந்துள்ளன. மொத்த சம்வங்களில் அவற்றின் எண்ணிக்கை 588. இது, முந்திய ஆண்டுடன் ஓப்பிட்டால் 31.9 விழுக்காடு உயர்வாகும். கடந்த ஆண்டு குறைவான வீட்டுத் தீச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் வர்த்தக இடங்களில் நிகழும் தீச்சம்பவங்கள் முந்திய ஆண்டைவிட கடந்த ஆண்டு 7.5 விழுக்காடு கூடியது. கடந்த ஆண்டு வீட்டில் நிகழ்ந்த 1,010 தீச் சம்பவங்களில் கவனிக்கப்படாத சமையல், மின்சாரம், அறைகலன் தீப்பற்றுவது ஆகியவற்றால் ஏற்பட்டுள்ளன. நடமாடும் சாதனங்கள் தொடர்பான தீ விபத்துகள் கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 19.1 விழுக்காடு குறைந்தது.

